பெற்றோர்களுக்கு நற்சான்றிதழ் – பள்ளிக் கல்வித் துறை அதிரடி அறிவிப்பு

slider அரசியல்
dpi – தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், வரும் நவம்பர் 14-ம் தேதியன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி தான் என்றபோதும், இந்தமுறை பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ’நவம்பர் 14-ம் தேதியன்று ஒரு மணிநேரம் செல்போனை ஆஃப் பண்ணி வையுங்கள்’ என்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இப்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதியன்று பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்தமுறை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மூலம்  எல்லா பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

அந்த வேண்டுகோள் என்னவென்றால், ‘’குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14-ந் தேதி) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருங்கள். இதை ஏதோ அன்றைய ஒருநாளுக்கு மட்டும் செய்யாமல், வாரத்திலோ அல்லது மாதத்திலோ கடைப்பிடியுங்கள். மேலும், www.gadgetfreehour.com என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினத்தில் அந்த இணையதளத்தை சென்று பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளுக்கு பதில் அளிக்கவும் பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கும் பெற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழக மாணவர்கள் நலன் சார்ந்து பள்ளிக் கல்வித் துறை பெற்றோர்களிடத்தில் இப்படியொரு செயலைத் தூண்டும் விதத்தில் களம் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் பல பகுதிகளிலுமுள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நற்காரியத்தை சமூக வலைத் தளங்களில் பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.