பாரதிய ஜனதாவோடு தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு?

slider அரசியல்
gk_vasan-_modi -ஜிகேவாசன் மோடி சந்திப்பு

டெல்லியில் இன்று (6.11.2019) பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். இதை முன்னிட்டு பா.ஜ.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையப் போகிறது என்றும், ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க.வில் தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவிருக்கிறது என்றும் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று ஜி.கே.வாசன் பேட்டி கொடுத்திருப்பதால், பரபரபரப்பு கிளப்பிய இந்த விவகாரம் உடனடியாக அடங்கியும் போய்விட்டது.

சந்திப்புக்குப் பின்னர்  செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்தித்தார்.

அப்போது அவர் “மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்று, நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்கிறார். இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என்ற முறையில் அவரை நான் அவரது இல்லத்திலுள்ள அலுவலகத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சினைகள் குறித்தும் பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். கல்வி, விவசாயம், தொழில் வேலைவாய்ப்பு, தமிழ் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினேன். அதனை பிரதமர் பொறுமையாக கேட்டுக்கொண்டார். அவ்வப்போது என்னிடம் சந்தேகங்களைக் கேட்டார். அதற்கு நான் விளக்கம் அளித்தேன்.

குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய திட்டங்களையும், மத்திய அரசின் திட்டங்களையும் சிறப்பாக மக்களுக்குச் சென்று சேர்க்கிறார்கள் எனத் தெரிவித்தேன். தமிழகத்தின் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவரிடம் சில கருத்துகளைச் சொன்னேன். என்னுடைய கணிப்பையும் அவரிடம் தெரிவித்தேன். மக்களவைத் தேர்தலின்போது தமிழக மக்களிடம் இருந்த எண்ண ஓட்டம் மாறியிருக்கிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல். மக்கள் பா.ஜ.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். வருங்காலத்தில் இந்த வெற்றி தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை பிரதமரிடம் தெரிவித்தேன். மத்திய , மாநில அரசுகள் மீதும் அதனைச் சார்ந்த கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று அந்த பேட்டியில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

அடுத்து செய்தியாளர்கள் ஜி.கே.வாசனிடம் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் பதிலும் அளித்தார்.

1.அமித் ஷாவைச் சந்திப்பதற்கான திட்டம் இருக்கிறதா?

‘’அமித் ஷாவைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த முறை அவரிடம் நேரம் கேட்கப்போவதில்லை. காரணம், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் அவரின் பங்கு முக்கியமாக உள்ளது. அதற்கடுத்த வாரங்களில் டெல்லி வரும்போது அவரைச் சந்திப்பேன். அவசரமாக சந்திப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை.’’

  1.  த.மா.கா.வை பா.ஜ.க.வுடன் இணைக்கப் போகிறீர்களா?

‘’தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐந்தாண்டு காலமாக படிப்படியாக இயக்கம் வளர்ந்துகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் மாறும். மரியாதைக்குரிய கட்சியாக, மக்கள் விரும்பும் கட்சியாக த.மா.கா செயல்படுகிறது. எங்களின் வியூகமே, உள்ளாட்சித் தேர்தலில் மக்களுக்காக த.மா.கா நிர்வாகிகள் செயலாற்ற வேண்டும் என்பதுதான். த.மா.க, பாஜகவுடன் இணைவதாகக் கூறுவது ஹேஷ்யம், ஜோசியம், வதந்தி, பொய்யான செய்தி. அதில் எந்த உண்மையும் இல்லை.’’

மேலே சொன்ன பேட்டியிலும், கேள்வி- பதிலிலும் ஜி.கே.வாசன் தெளிவாக பா.ஜ.க.வோடு இணையப் போவதில்லை என்று கூறியிருந்தாலும், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் அமைப்புரீதியாக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ் மாநில காங்கிரஸை பா.ஜ.க.வுடன் இணைக்கும் திட்டத்தில் தான் டெல்லி பா.ஜ.க. தலைமை இருக்கிறது என்றும், இந்த சந்திப்பு அதற்கான முன்னோட்டம் போன்றது என்கிற பேச்சும் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு தரப்பினர் மத்தியில் தற்போது பரபரபரப்பாக பேசபட்டு வருகிறது.

 

விசாகன்