என்ன செய்யப்போகிறார் அமித்ஷா?

slider அரசியல்
amithsha – அமித்ஷா

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க.வும், சிவசேனாவும் தேர்தல் முடிவுக்கு பின்பு, ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை பெற்றபோதும், முதல்வர் பதவி விஷயத்தில் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. வரும் 8-ம் தேதிக்குள் அங்கு புதிய அரசு அமையாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி வரவும் வாய்ப்புள்ளதால், மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க.வும், சிவசேனாவும் கொள்கை ரீதியாகவும் ஒத்துப் போகும் கட்சிகள் தான். மேலும், 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தேர்தல் கூட்டணியிலும் இருந்து வருகின்றன. ஆனால், இந்தமுறை சிவசேனா தாங்கள் தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க.வுடன் வெற்றி பெற்றால், முதல்வர் பதவி எங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டோம். ஆகவே, அதற்கு பா.ஜ.க. ஒத்துக் கொண்டால் மட்டுமே ஆட்சியமைக்க உடன்படுவோம் என்று கறாராக கூறியது மட்டுமல்ல, அதில் உறுதியாகவும் இருந்து வருகிறது. பா.ஜ.க. தரப்பிலோ, ஐந்து வருடமும் பா.ஜ.க. ஆட்சி தான். வேண்டுமானால் துணை முதல்வர் பதவி தருகிறோம் என்று உறுதியாக கூறியதோடு மட்டுமல்ல, அதில் பிடிவாதமாகவும் இருந்து வருகிறது.

இன்னொரு பக்கம் சிவசேனா தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. சிவசேனாவுக்கு ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

மேலும், தற்போது மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி சம்பந்தமாக ஒரு பேட்டியும் தந்துள்ளார். அந்த பேட்டியில் சரத்பவார், ‘’ பா.ஜ.க.விற்கு தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை. அதேபோல்தான் சிவசேனாவும். அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க போதுமான இடங்கள் கிடையாது. இரண்டு கட்சியும் மகாராஷ்டிராவில் 170 இடங்களை தனியாகப் பெறமுடியாது. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இவர்கள் தனிப்பெரும்பான்மை பெறமுடியும். சிவசேனா என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.  நாங்கள் அவர்களுடன் சேரமாட்டோம் என்று முன்பே கூறிவிட்டோம். எங்களுக்கு அந்த விருப்பம் கிடையாது. அமித் ஷா பெரும்பான்மை இல்லாமலே பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருக்கிறார். மகாராஷ்டிராவில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அவர் திறமையானவர் என்று கூறுகிறார்கள். அவர் தனது திறமையை வைத்து மகாராஷ்டிராவில் எப்படி ஆட்சியை பிடிக்கிறார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவும், கூட்டணி கட்சியான சிவசேனாவின் முரண்டு பிடிப்பும் பா.ஜ.க.வுக்கு பெரும் தலைவலியாகவும், சங்கடமாகவும் ஆகியுள்ளது. மகாராஷ்டிராவின் அரசியல் கிங்மேக்கர் என்ற அழைக்கப்படும் சரத்பவார் சொல்லியிருப்பது போலவே, இந்த விஷயத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா என்ன செய்யப் போகிறார் என்பதை அனைத்து அரசியல் கட்சியும் உற்று நோக்கி வருகின்றன. இதற்கான பதில் இன்னொரு இரண்டொரு நாளில் நிச்சயம் தெரிந்துவிடும்.

  • நிமலன்