அயோத்தி தீர்ப்புக்கு முன்கூட்டியே தயாராகும் பா.ஜ.க.!

slider அரசியல்
ayothya-அயோத்தி

உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் வரும் 17-ம் தேதிக்குள் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இந்தத் தீர்ப்பை முன்னிட்டு உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்போது பா.ஜ.க. கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், இந்த தீர்ப்பு குறித்து தங்கள் தொண்டர்களுக்கு கடும் கட்டளைகளைப் பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17 ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கு சம்பந்தபட்ட அனைத்து விசாரணைகளையும் தனது தலைமையிலான அமர்வில் வைத்து நடத்தி முடித்து விட்டார். இனி தீர்ப்பு வழங்கப்பட வேண்டியதுதான் மிச்சம். அந்தத் தீர்ப்பை வரும் 17-ம் தேதிக்குள் என்றைக்கு வேண்டுமானாலும் வழங்கவுள்ளார் நீதிபதி ரஞ்சன் கோகாய்.

இந்த வழக்கு ஆ.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கட்சிக்கு ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதேநேரத்தில் முன்பெல்லாம் அயோத்தி சம்பந்தபட்ட தீர்ப்புகள் வந்த காலத்தில் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை வேறு. பா.ஜ.க. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறது. ஆகவே, இந்தத் தீர்ப்பின் மூலம் எந்தவித மதக் கலவரங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாகவும், கட்சியாகவும் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது.

ஆகவே, இதனை முன்னிட்டு கடந்த திங்களன்று (4.11.2019) இது குறித்து விவாதிக்க,  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் டெல்லியில்  நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க.வின்  பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெங்களூருவிலும், கொல்கத்தாவிலும், மும்பையிலும் கூட இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர்  கூறுகையில், “தீர்ப்பு நாளன்று, தலைவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது போன்றவை குறித்து பட்டியலாக  தயாரித்துள்ளோம். தலைவர்கள் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. தீர்ப்பு வந்தபின்,  அரசு தரப்பிலிருந்து பிரதமரும், பா.ஜ.க. கட்சி சார்பிலிருந்து  தலைவர் அமித்ஷா மட்டுமே அறிக்கையை வெளியிடுவார்கள் ” என்று  கூறியுள்ளார்.

இதற்கொரு முன்னோட்டமாக அக்டோபர் 27- ம் தேதியன்று தனது ’ மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “குறிப்பிட்ட சில அமைப்புகள்’ 2010-ம் ஆண்டு வெளியான அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாக பதற்றத்தை உருவாக்கி, பிளவுகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஈடுபட்டனர். அப்போது, அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் முதிர்ச்சியுடன் செயல்பட்டு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது’’   என்று மோடி நினைவு கூர்ந்தார்.

பிரதமர் மோடியின் இந்த ‘மான் கி பாத்’ பேச்சின் சாராம்சமும்கூட வரப்போகும் தீர்ப்பின்போது அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தன என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கது.

உலகமே எதிர்பார்க்கும் இந்த பரபரப்பான தீர்ப்பின் மூலம் எந்தவித கலவரங்களும் ஏற்படாதவாறு பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பா.ஜ.க. எடுத்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்