சீமான் எச்சரிக்கையாக பேசவேண்டும் – தொல்.திருமாளவன்!

slider அரசியல்
தொல்திருமா-சீமான்

தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸும் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருக்கிறது. சீமானைப் போன்றே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும். தற்போது ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் பேசியது பற்றி தொல். திருமாளவன் பதிலளிக்கையில், இந்த விவகாரத்தில் சீமான் காலம் கருதி எச்சரிகையாக பேசவேண்டும் என்று கூறியுள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (16.10.2019) காலை தூத்துக்குடி வந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.   ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் கூறியதில்லை. அதேபோல இந்திய அரசாங்கத்தை அல்லது காங்கிரஸ் கட்சியை, மாவீரர் நாள் கூட்டங்களில் ஒருபோதும் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை.

ராஜீவ் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கனவே பலரும் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பழி விடுதலைப்புலிகளின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களின் கருத்து. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு அல்லது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்லுவது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது. ஐ.பி.கே.எப். மீது அனைவருக்குமே அதிருப்தி உண்டு. ஐ.பி.கே.எப்.யை அனுப்ப சொன்னதும் தமிழ்நாட்டு மக்கள், ஈழமக்கள். ஆனால், ஐ.பி.கே.எப். போன பிறகு அதன் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. முதன்முதலாக இந்திய அமைதிப்படையை எதிர்த்து உயிர் பலியானவர் தோழர் மாலதி. இந்திய அமைதிப்படையின் மீது சிங்களர்களுக்கும் கோபம் இருந்தது. தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான். ஆனாலும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும். விடுதலைப்புலிகள் பிரபாகரன் கூட ஒரு நாளும் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியதில்லை. இந்திய அரசை பகைத்துக் கொள்ளாத ஒரு அணுகுமுறையைத்தான் அவர் கையாண்டார்’’ என்று கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி மரணம் குறித்து காங்கிரஸார் கொந்தளித்துபோயுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சீமான், இந்த விவகாரத்தில் சீமான் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் பேசியிருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறாரேயொழிய, சீமான் பேச்சுக்கு கண்டனம் ஒன்றும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது  விரைவில் காங்கிரஸ் – விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி உறவில் விரிசல் ஏற்படுத்தலாம் என்கிற கருத்தும் தமிழக அரசியல் களத்தில் விவாதமாகியுள்ளது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்