அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் மீண்டும் கைது! – அதிர்ச்சியில் காங்கிரஸ்

slider அரசியல்
ப.சிதம்பரம்

 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ப.சிதம்பரம் ஐ.என்.எஸ். மீடியா வழக்கில், சி.பி.ஐ.யால் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  இரண்டு மாதத்துக்கு மேலாக திகார் சிறையில் இருந்து வரும் ப.சிதம்பரத்தை இதே வழக்கில் அமலாக்காத்துறையும் கைது செய்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த இரண்டு மாதமாக திகார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நாளை
(17-ந்தேதி)யுடன் முடிவடைய இருந்தது. மேலும், நாளை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டால், அவருக்கு ஜாமீன் கிடைத்து விடுதலையாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதே வழக்கில் அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிகோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இதில் அமலாக்கத்துறை விசாரணைக்காக தன்னை கைது செய்யக்கூடாது என்று ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டதும் கவனிக்கத்தக்கது. இதனால் சிறப்பு கோர்ட்டின்  தீர்ப்பு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம் என்று நேற்று (15.10.2019) டெல்லி சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்யலாம் என்றும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கான வசதிகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலுக்கு இன்று (16.10.2019) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு ஒன்று சென்றது. சிறப்புக்  கோர்ட்டு உத்தரவுப்படி மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மட்டும் திகார் ஜெயிலுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி பெறுவதற்கு தரப்பட்ட கமிஷன் பணப்பரிமாற்றம் பற்றி ப.சிதம்பரத்திடம் ஏராளமான கேள்விகள் கேட்டுள்ளனர் என்றும், மேலும், பணப்பரிமாற்றம் குறித்து இந்திராணி முகர்ஜி கொடுத்துள்ள வாக்குமூலம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும், இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ப.சிதம்பரம்  நேரடி பதில் அளிக்கவில்லை என்றும் டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப.சிதம்பரத்திடம் இன்று (16.10.2019) நடத்தப்பட்ட விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாம். சுமார் இரண்டு மணி நேரம் விசாரணைக்குப் பிறகு ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனராம்.   தங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் மீது டெல்லி பா.ஜ.க. அரசு மேற்கொண்டுவரும் தொடர் கைது நடவடிக்கைகளால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது என்பதை நன்றாக உணர முடிகிறது என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள்.

 – தொ.ரா.ஸ்ரீ.