பா.ஜ.க.வில் சவுரவ் கங்குலி?

slider விளையாட்டு
souvrav kanguli-சவுரவ் கங்குலி

சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. தலைவரும்,   மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவருமான சவுரவ் கங்குலி சந்தித்தார். . இந்த சந்திப்புக்கு பிறகுதான் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வாக இருக்கும் தகவல் வெளியானது. இதனால், விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சவுரவ் கங்குலி சேரப் போகிறார் என்கிற பேச்சு கிளம்பியிருக்கிறது.

இது குறித்து பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். “கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிரிக்கெட் சங்க தலைவராக யார் வர வேண்டும் என்று நான் முடிவு செய்ய முடியாது. கிரிக்கெட் சங்க தேர்தல் விதிகளின்  அடிப்படையில் கங்குலி அந்த பதவிக்கு வந்துள்ளார். நான் கிரிக்கெட் விளையாட்டுடன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளேன். எனவே கங்குலி என்னை சந்தித்துப் பேசியதில் எந்த தவறும் இல்லை. நாங்கள் அரசியல் பேசவில்லை. மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக தகவலை பரப்புகிறார்கள். நான் அத்தகைய பேரம் எதையும் பேசவில்லை. அதே சமயத்தில் கங்குலி விரும்பி வந்தால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. தயாராக உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது என்னவென்றால், பாரதிய ஜனதா கட்சிதான் தாங்கள் சேருவதற்கு சிறந்த கட்சியாகும். இதை செய்ய நான் தயங்க மாட்டேன். இதுதான் என் வேலை. மேற்கு வங்க தேர்தலுக்காகவே கங்குலியை நாங்கள் தேடுவதாக சொல்வது தவறு. எந்த பிரபலமும் இல்லாமலேயே அங்கு 18 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் அமோக வெற்றி  பெறுவோம்’’ என்று தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

சென்ற பாராளுமன்றத் பொதுத் தேர்தலின்போது பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாரதீய ஜனதாவில் சேர்க்கப்பட்டு எம்.பி.யும் ஆகிவிட்டார். இப்போது மேற்கு வங்காளத்தில் செல்வாக்குள்ள சவுரவ் கங்குலியை பா.ஜ.க.வில் கொண்டுவருவதன் மூலம் மம்தா பானர்ஜியை எதிர்க்கவும், அடுத்துவரும் தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும் பா.ஜ.க. தீட்டியுள்ள திட்டங்களில் ஒன்றாக கங்குலியை பா.ஜ.க.வில் கொண்டுவருவதும் இருக்கலாம் என்றும், அதற்கு முன்னோடியாகவே அவர் பி.சி.சி.ஐ. தலைவராக்கப்பட்டுள்ளார் என்றும்,  கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதே கங்குலியை சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்தது என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

நிமலன்