உளவுத்துறை தகவலால் அதிர்ச்சியான தமிழக முதல்வர்!

slider அரசியல்
pazhanisamy

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி  ஆகிய இரண்டு இடைத் தேர்தல்களிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக அமைச்சர்கள் எல்லோரும் இரண்டு தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக உளவுத்துறை இரண்டு தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்கிற ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. இது அ.தி.மு.க. இரட்டை தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது..

சமீபத்தில் நடைபெற்ற வேலூர் பாராளுமன்றத் இடைத் தேர்தலில் ஏ.சி.சண்முகம் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையை ரொம்பவே அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். இதன்மூலம் அ.தி.மு.க.வின் தலைமைக்கு டெல்லி தரப்பிலிருந்து நிறைய அழுத்தங்கள் தரப்பட்டதாம். இதை நன்கு உணர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அமைச்சர்களிடம் எப்படியும் இந்த இரண்டு தொகுதிகளிடம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கடும் உத்தரவிட்டிருக்கிறாராம்.

இரண்டு இடைத்தேர்தல் தொகுதியிலும் பத்து நாளைக்கு முன்புவரை அ.தி.மு.க.விற்குதான் நிலைமை சாதகமாக இருந்திருக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தபிறகு தி.மு.க.வுக்கு ஆதரவாக மாறியிருக்கிறது என்கிற தகவலை முதல்வரிடம் உளவுத்துறை கொடுத்திருக்கிறதாம். இதற்கு உளவுத்துறை தரப்பில் விக்கிரவாண்டியில் பிரசாரத்தின்போது ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், முன்னாள் அமைச்சர் ஏ.ஜி. கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் பேசியிருப்பது, அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாகவுள்ள வன்னியர்களிடம் பெருத்த ஆதரவை பெற்றிருக்கிறதாம். நாங்குநேரியை பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களத்தில் இறங்கி பம்பரமாக வேலை பார்க்கிறார். ஆனால், அ.தி.மு.க. தரப்பில் காங்கிரஸ் தானே என்கிற அலட்சியம் இருப்பதும், தோல்வியைத் தரலாம் என்கிற காரணத்தையும் தனது ரிப்போர்ட்டில் உளவுத்துறை சொல்லியிருக்கிறதாம்.

தமிழக உளவுத்துறை கொடுத்த ரிப்போட்டுக்கு பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கள நிலவரத்தை சொல்லி தேர்தல் வேலைகளை வேகப்படுத்தியுள்ளதாக, அ.தி.மு.க. தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டாலும், ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படப் போவதில்லை என்றபோதும், தொடர்ச்சியாக தோல்வி காணுகையில் அந்தக் கட்சியின் செல்வாக்கு சரிகிறது என்றே சாமான்யன் பார்வையில் அரசியல் கணக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்