ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சை பேச்சு – விரைவில் சீமான் கைது?

slider அரசியல்
            

நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஆதரித்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களங்களாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதில் விக்கிரவாண்டியில் சீமான் தனது பேச்சில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பல இடங்களில் சீமான் பேசினார். அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்’’ என்கிற தொனியில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

சீமானின் இந்தப் பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. உட்பட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், சீமான் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர். இதனால்,  தற்போது சீமானுக்கு எதிராக விக்கிரவாண்டி காவல்துறையினர் பொது அமைதிக்கு  குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இரண்டு பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சீமான்,  “ராஜீவ் காந்தி குறித்த பேச்சைத் திரும்பப் பெறமாட்டேன்.   இதுபோன்று பல வழக்குகளைச் சந்தித்துவிட்டேன். சிதம்பரத்தை வெளியே கொண்டு வரவும், என்னை உள்ளே தள்ளவும் போராடுகிறார்கள். இப்போது, நான் பேசியதால் என்ன கலவரம் வந்துவிட்டது? வழக்கை சட்டப்படி சந்திப்பேன். காங்கிரஸ் கட்சியினர் எந்தப் பிரச்னைக்காக போராடியுள்ளனர். இதற்காக போராடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பிரபாகரனை முன்வைத்தே எங்களது அரசியல் பரப்புரை இருக்கும். எப்படிப் பேச வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளதா?   என் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ராஜீவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? இதே தமிழக சட்டசபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் படத்தை பச்சை குத்திக் கொண்டு எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் காலமும் வரும்’’ என்று பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வும், மத்தியில் ஆளுங் கட்சியான பா.ஜ.க.வும் சீமானை கைது செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந்தன என்றும், இதில் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வுக்கும் சீமான் மீது கோபம் உண்டு என்றும், அதற்கான வாய்ப்பை சீமானே சரியாக கொடுத்துள்ளார் என்றும், இடைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் எந்நேரத்திலும் சீமான் கைது செய்யப்படலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தொ.ரா.ஸ்ரீ.