மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலிதளம் நீக்கம்?

slider அரசியல்
sukbirsing badal-சுக்பீர்சிங்பாதல்

வரும் 21-ம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதேநாளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் ஹரியானாவில் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் அமைச்சரவையில் பங்கு வகித்துள்ள சிரோமணி அகாலிதளம், பா.ஜ.க.வை எதிர்த்து களம் காணுவது தேசிய அரசியலில் பெரும் விவாதமாகியுள்ளது.

பஞ்சாபில் செல்வாக்குள்ள பெரிய கட்சியான சிரோமணி அகாலிதளத்துக்கு, ஹரியானாவிலும் குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. மேலும், பஞ்சாபுக்கும், ஹரியானாவுக்கும் சண்டிகர் தான் மாநில தலைவராக இருந்து வருகிறது என்பதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் தற்போது மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், மத்தியிலும், பஞ்சாபிலும் கூட்டணி கட்சியாகவுள்ள பா.ஜ.க.வுக்கு எதிராக  களத்தில் நிற்கிறது சிரோமணி அகாலி தளம். ஹரியானாவில் செல்வாக்குள்ள பெரிய கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து சிரோமணி அகாலிதளம் கட்சி போட்டியிடுகிறது.

சமீபத்தில், ஹரியானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுக்பிர் சிங் பாதல், ’’பா.ஜ.க.வுக்கு ஆதரவாக எந்த அலையும் வீசவில்லை. மீண்டும் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பது கடினம். மேலும், சிர்சா மாவட்டத்தில் பா.ஜ.க.வால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. அடுத்தும் நம்மை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என பா.ஜ.க.வினர் தப்புக்கணக்கு போடுகின்றனர். அது நடக்காத காரியம்’’ என பேசியுள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி, ஆளும் கட்சியான பா.ஜ.க.வை  இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்வது என்பது அரசியல் பண்புக்கு ஏற்றதல்ல என்கிற முடிவுக்கு டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைவர்கள் வந்துள்ளார்கள் என்றும், மேலும், பா.ஜ.க. தலைவர்களை இந்தப் பேச்சு கோபப்படுத்தும் என்று தெரிந்தே சுக்பீர்சிங் பாதல் பேசியுள்ளார் என்றும், இதற்கு ஹரியானா தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வின் டெல்லி தலைமையால் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும், அனேகமாக அது கூட்டணி முறிவு மற்றும் அமைச்சரவையிலிருந்து நீக்குதல் வரைகூட செல்லலாம் என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

   -எம்.டி.ஆர்.ஸ்ரீதர்