டி.டி.வி. தினகரனுக்கு என்னாச்சு? – குமுறும் அ.ம.மு.க தொண்டர்கள்

slider அரசியல்

 

ttv dinakaran-டிடிவி தினகரன்

 

அ.ம.மு.க. பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் தற்போது ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவருக்கு நெருக்கமாக இருந்துவந்த கர்நாடக புகழேந்தி, கொஞ்ச நாளாகவே தினகரன் மீது அதிருப்தி கொண்டு கடும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், சட்டசபையில் பேசவே தெரியாத ஒருவருக்கு எம்.எல்.ஏ. பதவி எதற்கு என்று தினகரனை நோக்கி புகழேந்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில், அ.ம.மு.க. அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  புகழேந்தி கலந்து கொண்டார். அங்கே அவர் பேசும்போது, “டி.டி.வி. தினகரன் பின்னால் இனிமேல் எங்களால்  பயணிக்க முடியாது. நம்முடைய கனவுகள் எல்லாம் பொய்யாகிப் போனது. இந்த நிலையில் தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது. ஒருவேளை அ.தி.மு.க.வுக்கு ஏதாவதும் பிரச்னை என்றால் நாங்கள் சிப்பாய்களாக துணையாய் நிற்போம்.   தினகரன், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை இழிவு செய்து பேசி வருகிறார். மக்கள் அதை ஏற்கவில்லை. அவரை நம்பி, அ.தி.மு.க.விலிருந்து அ.மு.ம.க.வில் இணைந்ததால்  தகுதி நீக்கம் நீக்கம் செய்யப்பட்ட 18  எம்.எல்.ஏக்களும் மன உளைச்சலில் உள்ளனர். அதனால் தற்போது எம்.எல்.ஏ.வாகவுள்ள தினகரன் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், பேரவையில் பேசவே தெரியாத தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி? எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா  செய்து விடலாம்’’ என்று  பேசினார்.

pugazhenthi-புகழேந்தி

 

புகழேந்தியின் இந்தப் பேச்சு குறித்து அ.ம.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து, இப்போது அந்தக் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருக்கும்  தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “பேரவையில் பேசவே தெரியாத தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா  செய்து விடலாம் என்று புகழேந்தி கூறியுள்ளது மிகச் சரியானது’’ எனக் கூறியுள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பலத்த போட்டியையும், பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வின் பலத்த போட்டியையும் எதிர் கொண்டு, சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் 45,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இந் நிலையில் புகழேந்தி போன்றவர்களின் விமர்சனங்களை பார்க்கையில், இப்போது தினகரனுக்கு என்னாச்சு? என்கிற கேள்வி, அ.ம.மு.க. அடிமட்ட தொண்டர்களின் உள்ளத்தில் குமுறலாக வெளிப்படுவதை நிறையவே கேட்க முடிகிறது.

தொ.ரா.ஸ்ரீ.