ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ – சந்திரபாபு நாயுடு ‘பகீர்’ பேச்சு!

slider அரசியல்
சந்திரபாபுநாயுடு-ஜெகன்மோகன்ரெட்டி

 

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடித் திட்டங்களை அந்த மாநில மக்களுக்காக அறிவித்து வருகிறார். குறிப்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் ஜெகன்மோகன் காட்டும் அக்கறை, இளைஞர்களிடையே அவருக்கான செல்வாக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் எதிர்க் கட்சித் தலைவரான தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளால், அவர் மீது விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ என்று சந்திரபாபு நாயுடு பேசியிருப்பது, ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்றது முதல் மக்கள் சார்ந்து பல அதிரடிகளை அறிவித்து வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு மீது கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். குறிப்பாக, சந்திரபாபு நாயுடு குடியிருப்பை இடித்துத் தள்ளியது, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைத்தது, விமான நிலையத்தில் நிற்க வைத்து சோதனையிட வைத்தது எனக் கூறிக்கொண்டே போகலாம்.  இதனால், ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நேற்று அக்டோபர் 11-ம் தேதி விசாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘’நான் பல முதல்வர்களை பார்த்துள்ளேன். ஜெகன் மோகன் ரெட்டியை போல் ஒரு மோசமான நபரை எனது வயதிற்கு பார்த்ததில்லை. எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளை தொடுத்து ஒடுக்க நினைக்கிறார். மொத்தத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோவை போல் செயல்படுகிறார். ஜெகன் தனது பழிவாங்கும் போக்கை மாற்றிக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சி நடத்த வேண்டும். ஜெகன் இப்படியே செயல்பட்டார் என்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரிக்கையும் செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

இளம் வயதில் ஆந்திர மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்று அசைக்க முடியாத பெரும்பான்மையில் ஆட்சியில் முதல்வராக அமர்ந்திருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பல்வேறு அதிரடித் திட்டங்கள் குறித்து ஆந்திராவுக்கு வெளியிலேயும் அவருக்கு நன்மதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் வளர்ச்சி நாளை ஜெகன்மோகனை தேசிய அரசியலிலும் முக்கிய பங்காற்ற வைக்கும்.

நிமலன்