சிறு படங்கள் வெளியீட்டில் தொடரும் சிக்கல்

slider சினிமா
director bharathiraja-இயக்குநர் பாரதிராஜா

சமீபத்தில் வெளியாவதற்கு தயாராக இருந்த ‘மிகமிக அவசரம்’ படம் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் படும் துயரங்களை தோலுரித்து காட்டியிருந்தது. இந்தப் படத்துக்கு ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்தளவுக்கு வரவேற்புக்குள்ளான இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தன என்று இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி கூறிய தகவலால் திரையுலகம் பெரும் பரப்பரப்பு அடைந்தது.

இது குறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்.’ பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாக சொல்லியிருந்தார். சமூகத்துக்கு தேவையான இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் நெகிழ்ந்து பாராட்டினர். இந்த படம் திரைக்கு வருவதையொட்டி ரூ.85 லட்சத்துக்கும் மேலாக விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. ஆனால், படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள்தான் திரையிட முடியும் என்றும் அதே நாளில் வேறு படம் வருகிறது என்றும் அதற்கு திரையரங்குகளை ஒதுக்குவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி விட்டனர். இது ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் வயிற்றில் கட்டையால் அடிப்பதுபோன்ற கொடூர செயல். மக்கள் எந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல. திரையரங்கு உரிமையாளர்கள் இந்த போக்கை தொடர்ந்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்னை வராமல் தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும், தடைகளும் உடனடியாக சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின் கையில் தான் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தி தீர்வுகாண வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தின் பொது வேண்டுகோள்.