காஷ்மீர் போலவே ராமர் கோவில் விவகாரத்திலும் களமிறங்குகிறதா பா.ஜ.க.?

slider அரசியல்

இந்தியாவில் அதிக எம்.பி.க்களை கொண்ட உத்தர பிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் அமைந்துள்ள ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி நில விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான  ஐந்து நீதிபதிகள் அமர்வு விரைவாக விசாரித்து வருகிறது. இதன் இறுதி தீர்ப்பு நவம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என்றும், காஷ்மீர் போலவே அயோத்தி விவகாரத்திலும் மத்திய பா.ஜ.க. அரசு நடந்துகொள்ளும் என்கிற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாலும், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ayothi-அயோத்தி

 

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான  ஐந்து நீதிபதிகள் அமர்வு ஆகஸ்ட் முதல், நாள் தோறும் விசாரித்து வருகிறது.  “அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும்   அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்காக விசாரணையை தினமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கவும், சனிக்கிழமை அன்றும் வழக்கை விசாரிக்கவும் தயாராக உள்ளோம். அனைவரும் சேர்ந்து வழக்கை அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க முயற்சி செய்வோம். மனுதாரர்கள் விரும்பினால் மத்தியஸ்தம் மூலம், பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்’’ என்று சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்தார்.

இதன்படி இந்த வழக்கு விசாரணை சமீப நாட்களாக விரைவாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் இறுதி வாதங்கள் அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்கப்படலாம் என்றும், நவம்பர் 17- ம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் சொல்லபடுகிறது. காரணம், நவம்பர் 17-ம் தேதியன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற உள்ளார். ஆகவே, எப்படியும் நவம்பர் 17-ம் தேதிக்குள் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகிவிடும் என்றும் உச்சநீதிமன்ற வட்டாரத்தை மேற்கோள் காட்டி டெல்லியிலிருந்து தகவல் கசிந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் ஜா  ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அவர் தனது உத்தரவில், “இருபத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து வரும் டிசம்பர் மாதம் 10 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வரும் நாட்களில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெறுகிறது. நவம்பர் 17-ம் தேதிக்குள் ஏற்கெனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியபடி, இனியும் தள்ளிப் போகாமல், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாவது உறுதியாகிவிட்டது. அப்படி வெளியாகும் தீர்ப்பில் ராமர் கோவில் இந்துக்களுக்கு தான் உரிமையானது என்கிற அனுகூலமான தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில், உடனடியாக கொஞ்சமும் தாமதிக்காமல் ராமர் கோவிலை கையகப்படுத்தவும், கலவரங்கள் ஏதும் நடைபெறாமலிருக்கவும் அம்மாவட்டம் உட்பட உத்தரப் பிரதேசம் ஒட்டுமொத்தத்துக்கும் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றும், இது காஷ்மீர் பாணியில் அயோத்தியிலும் களமிறங்க பா.ஜ.க. அரசு தயாராகிவிட்டதையே காட்டுகிறது என்கிற ரீதியில் தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதங்களையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.