வெற்றிகளைக் குவிக்கும் இந்திய கிரிக்கெட் அணி – மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

slider விளையாட்டு

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி. முதலில் இரு அணிகளும் மோதிய டி-20 தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 10-ம் தேதி அன்று மகாராஷ்டிராவிலுள்ள புனேவில் தொடங்கியது.

Virat-Kohli – விராத் கோலி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் துவக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் சதம் அடித்தார். இவர் ஏற்கெனவே இந்த தொடரின் முதல் டெஸ்டிலும் சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான கடந்த 11-ம் தேதி அன்று இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. 59 ரன்கள் எடுத்திருந்தபோது ரஹானே ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது ஏழாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

மேலும், தனது 138-வது இன்னிங்ஸில் 7000 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த இன்னிங்ஸில் 7000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோருடன் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 131 இன்னிங்ஸில் வாலி ஹாமண்ட்டும், 134 இன்னிங்ஸில் வீரேந்திர சேவாக்கும், 136 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கரும் 7000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 156 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்த இந்தியா ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. 254 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.

இந்தியா முதல் இன்னிங்ஸிலே 601 ரன்கள் எடுத்திருப்பதால், இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகப் கோப்பையில் அரையிறுதியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இந்திய அணி இழந்துபோதும், அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் சென்று ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை செய்தது. இப்போது இந்தியாவில் தென்னாப்பிரிக்கா அணியுடனும் வெற்றிமேல் வெற்றி குவித்து வருகிறது. தனிப்பட்ட வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் பல்வேறு சாதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக செய்துக் கொண்டு வருவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

எஸ்.எஸ்.நந்தன்