சீன அதிபர் வரவேற்பில் தமிழர் பெருமையை நிலைநாட்டிய மோடி!

slider அரசியல்

பக்கத்து நாடுகளான இந்தியாவும், சீனாவும் நீண்ட காலமாகவே நல்லுறவை பேணி வருகின்றன. இந்த உறவை மேலும் வலுப்படுத்த கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தின் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. இதன்படி இன்று (அக்டோபர் 11-ம் தேதி) பிற்பகல் 1.30 மணிளவில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படியும் அவருக்கு சிறப்பான முறையில் மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு விமான நிலைய பகுதியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். அதன்பின், அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.  அங்கு மாலை 4 மணி வரை தங்கி ஓய்வெடுத்தார்.

இதன்பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து புறப்பட்ட சீன அதிபருக்கு வழியெங்கும் 34 இடங்களில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டங்களுடன் கோலாகல வரவேற்புகள் அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாகத்தோடு வரவேற்பு அளித்தனர். மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங்கை வேட்டி, சட்டையில் வந்து இந்தியப் பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியை ஜின்பிங்குக்கு சுற்றிக் காட்டிய மோடி, அங்குள்ள சிற்பக்கலையின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினார். பின்னர் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் இராமாயண கதைகளை விளக்கிச் சொல்லும் விதமாகவும், நிகழ்ச்சியின் முடிவில் தேசப் பிதா காந்தியடிகளின் அஹிம்சையை பறைசாற்றும் விதமாகவும் நிகழ்ச்சிகள் அமைந்தன.

 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவதால் தமிழகமும், தமிழர்களும் பெருமைபடுவது ஒரு பக்கம் என்றால், பிரதமர் மோடி தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் வேட்டி, சட்டை அணிந்து சீன அதிபரை வரவேற்றதும் தமிழர்களை பெருமைப்படுத்தியிருக்கிறது.

விசாகன்