ஸ்டாலின் – ராமதாஸ் மோதலால், அ.தி.மு.க.வுக்கு நல்ல லாபம்!

அரசியல்

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக பா.ம.க. இருக்கிறது. இந்த இரண்டு இடைத் தேர்தல் தொகுதிகளில் ஒன்றான விக்கிரவாண்டி தொகுதியில் வன்னிய சமூகத்து மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தற்போது இடைத் தேர்தல் பிரசாரம் தீவிரமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும் வன்னியர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக பெரும் மோதலே ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, “தி.மு.க. ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு எம்.பி.சி. உருவாக்கப்பட்டது” என்று ஸ்டாலின் பேசினார். மேலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம்” என்றும் கூறினார்.

இதற்குதான் பா.ம.க. தலைவர் ராமதாஸ் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலின் இந்தப் பேச்சு குறித்து ராமதாஸ் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்பது உட்பட, ஏராளமான வெற்று வாக்குறுதிகளை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி அடைவது மட்டுமின்றி, ‘டிபாசிட்’ வாங்க முடியாதோ என்ற அச்சம், அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.  பாராளுமன்ற தேர்தலில், நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை அளித்து, மக்களை கடனாளி ஆக்கியவர் இந்த ஸ்டாலின். இப்போது வன்னியர்கள் ஓட்டுக்களை சுரண்டும் நோக்குடன், பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார். வேலுார் பாராளுமன்றத் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது என்பதைக் கூட உணராமல், கற்பனையில் ஸ்டாலின் மிதக்கிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டில் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. வன்னியர்கள் போராட்டத்தால் தான், இடஒதுக்கீடு கிடைத்ததே தவிர, தி.மு.க., அதை பெற்றுத் தரவில்லை. சமூக நீதி வரலாறு எல்லாம், அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறுவது, ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுவதற்கு இணையானது’’ என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியைப் பொறுத்தவரை பா.ம.க. தனித்துப் போட்டியிட்டாலே பெரியளவில் ஓட்டுக்கள் வாங்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டது. இது அங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பெருமளவுக்கு கைகொடுக்கும். இதில் ராமதாஸுக்கும், ஸ்டாலினுக்குமான இந்த மோதல் அ.தி.மு.க. வேட்பாளரை அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற உதவிடலாம் என்கிற கருத்தும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்