நாங்குரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உதவும் எட்டு காரணங்கள்!

slider அரசியல்

 தமிழகத்தில் வரவிருக்கின்ற அக்டோபர் 21-ம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இரண்டு தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க.வே தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, ஆனால், முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வோ விக்கிரவாண்டியில் மட்டுமே போட்டியிடுகிறது. நாங்குநேரியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சிக்கு இன்னும்  பலம் சேர்க்க கூடுதல் எம்.எல்.ஏக்கள் தேவைபடுவதால் இரண்டு தொகுதிகளின் வெற்றியையும் ரொம்பவும் முக்கியமாக கருதி களத்தில் இறங்கியுள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தான் வெற்றிபெறும் என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை குறித்த விபரம் என்னவென்று பார்ப்போம்.

  1. இடைத்தேர்தல் என்றாலே ஆளும் தரப்புதான் வெற்றி பெறும் என்பது தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் நடைமுறை. இது அ.தி.மு.க.வுக்கான முதல் பிளஸ்பாயிண்ட்.
  1. ஆட்சி கவிழ்ப்பு நடந்தே தீரும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அடிக்கடி பேசிவந்தபோதும், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றினாலும், அ.தி.மு.க. ஒன்பது தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிக்கு பாதகம் இல்லாமல் பார்த்துக் கொண்டது.
  2.     சமீபத்தில் நடைபெற்ற வேலூர் பாராளுமன்றத் இடைத் தேர்தலில் தி.மு.க.வினால், வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. அதாவது,  இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகரித்து காணப்பட்டது.  மேலும், பா.ஜ.க.வுடனான உறவை இந்தத் தேர்தலில் துண்டித்துக் காட்டியதும், நெருக்கத்தைக் குறைத்துக் காட்டியதும், பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிடாமல் பார்த்துக் கொண்டதும், இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியை துண்டிப்பது போல காட்டிக் கொண்டு தொகுதி மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. பெற்றதுதான் வாக்குகள் அதிகமானதுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
  1. இதுபோக, பா.ஜ.க. எதிர்ப்பு என்பது தி.மு.க. தரப்பில் வரவர ரொம்பவே குறைந்து காணப்படுகிறது. மேலும், இந்தி மொழி போராட்டம் திடீர் வாபஸ். கடந்த (அக்டோபர் 30-ம் தேதி) மோடி வந்து சென்றதற்கு பலமான எதிர்ப்பின்மை போன்றவைகளும், பா.ஜ.க.வின் மீதான தி.மு.க.வின் நிலைப்பாட்டை தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்லாது தி.மு.க.வின் ஆதரவு வாக்காளர்களும் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.
  2. மேலும், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் பணத்தை வாரியிறைக்க அ.தி.மு.க முடிவெடுத்திருக்கிறது. ஆனால், தி.மு.க. இதே பார்முலாவை அமல்படுத்துமா, தொகுதிக்குள் தாராளங்களைக் காட்ட முன்வருமா? அப்படியே காட்டினாலும் காங்கிரஸ் போட்டியிடும் நாங்குநேரியிலும் காட்டுமா, வாக்காளர்களை திருப்திப்படுத்துமா என்பதும் சந்தேகமாகவே தோன்றுகிறது.
  3.     காங்கிரஸுக்கு நாங்குநேரி எவ்வளவு பலமோ, அ.தி.மு.க.வுக்கு விக்கிரவாண்டி அந்த அளவுக்குப் பலமாக இருக்கிறது. இதற்குக் காரணம், பா.ம.க.வும், தே.மு.தி.க.வும்தான். இரு கட்சிகளும், அ.தி.மு.க.வுக்கான ஆதரவை அள்ளி வழங்கி உள்ளதால், தி.மு.க.வின் வெற்றி பெறுவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.
  4. இதைத் தவிர, நாங்குநேரியை எடுத்துக் கொண்டாலும், அங்கு உள்ளூர் காங்கிரஸ் முட்டி மோதிக் கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபிக்கு போதுமான ஆதரவை அங்குள்ள காங்கிரஸாரே தரவில்லை. இங்கு உள்ளடி வேலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால், ஆளும் கட்சியான அ.தி.மு.கவே இங்கு வெற்றி பெற்றாலும் வியப்பில்லைதான். ஏனென்றால், கூட்டணி கட்சிக்காக நாங்குநேரியில் தி.மு.க. இறங்கி தேர்தல் வேலை செய்யுமா என்கிற சந்தேகமும் இருக்கிறது.
  5. எல்லாவற்றிற்கும் மேலாக, தினகரனும்,கமலும் இந்த முறையும்   போட்டியிடவில்லை. போனமுறையே வேலூரில் அ.ம.மு.க. வாக்குகளை அ.தி.மு.க.தான் அள்ளிக் கொண்டது. இந்தமுறையும் இந்த கட்சிகளின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக போகவும் வாய்ப்பிருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட எட்டு காரணங்களை வைத்துப்பார்த்தோமொன்றால், அ.தி.மு.க.வே இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் ஜெயிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

நிமலன்