ஸ்கூல் டே ஜாலி டே! – மனம் திறக்கும் பிரபலங்கள்!

உலகம்

 ‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்?’’ சில பிரபலங்களைக் கேட்டோம்.

வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளிலும் கரைந்துவிடாமல் கூடவே பயணிப்பது நம் பள்ளிப் பருவத்து நினைவுகள். எத்தனை உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், நம்மோடு பள்ளியில் படித்த சக நண்பர்களைக் காணும்போது, மீண்டும் ஒரு முறை பள்ளியின் வளாகத்திற்குள் மனதை எட்டிப் பார்க்கச் செய்வோம். பென்சிலைத் தொலைத்து, பேனா மூடியைக் கடித்து, இடைவேளைப் பொழுதுகளில் எச்சில் ஒழுக மிட்டாய் தின்று, நண்பர்களோடு விளையாடியும், பகைத்தும், உறவாடியும் மகிழ்ந்த பொழுதுகள் அவை. புத்தக மூட்டையைச் சுமந்த பால்ய பருவத்தின் நினைவுகள் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட வரலாறுகள். பல்துறை பிரபலங்கள் சிலர் இங்கே தனது பள்ளிக்கூட நினைவுகளை மனம் திறக்கிறார்கள்.

 

ரேணுகாவை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது!

 வானதி சீனிவாசன்

“நான் படித்ததெல்லாம் கோவை தொண்டாமுத்தூரில் இருக்கும் அரசுப் பள்ளியில்தான். ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஏழு ஆண்டுகள் அதே பள்ளியில்தான் படித்தேன்.  ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது, சாரணர் இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது எனது சாரணர் இயக்க செயல்பாடுகள். சாரணர் இயக்கத்தின் சார்பாக நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ வெளியூர் சென்று சமூகப் பணிகளில் ஈடுபடுவோம். அப்போது  சக மாணவிகளோடு அடித்த அரட்டைகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன.

வானதி ஸ்ரீனிவாசன்-Vanathi Srinivasan

எட்டாம் வகுப்பு படிக்கும்போது என் நெருங்கிய தோழிகளாய் இருந்தவர்கள் ரேணுகா, ஜெயலட்சுமி, கற்பகம். நாங்கள் நால்வரும் வாழ்நாள் முழுமைக்கும் இணைபிரியாத் தோழிகளாக இருக்கவேண்டும் என அப்போது சபதம் எடுத்துக்கொண்டோம். ஆனால், ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழையும்போது, ரேணுகா மட்டும் எங்களைப் பிரிந்து சென்றாள். ஊட்டியில் உள்ள பிரபலமான ஒரு பள்ளியில் அவளுக்கு இடம் கிடைத்தது.  ஆனாலும், எங்கள் நட்பு கடிதம் வாயிலாகவும், ஊருக்கு வரும்போது சந்தித்துக்கொள்வதுமாய் தொடர்ந்துகொண்டிருந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்று சேரும்போது, ரேணுகா ஒருவரைக் காதலிப்பதாக சொன்னாள். எங்களால் அவளின் காதலை புரிந்துகொள்ள முடியாத நிலை. ஆதரவும், எதிர்ப்பும் சொல்ல முடியாத சூழல். ஒருநாள் ரேணுகா தற்கொலை செய்துகொண்டாள் என்கிற தகவல் எங்களை பேரிடியாய் தாக்கியது. அவளின் காதலர் ஒரு விபத்தில் மரணமடைய, அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவளும் தற்கொலை செய்துகொண்டதாய் செய்திகள் வந்தன. வாழ்நாள் முழுமைக்கும் பிரிந்துவிடக்கூடாது என ரேணுகாவோடு சத்தியம் செய்துகொண்ட அந்த நாளை இப்போது நினைத்தாலும் நெஞ்சில் ஏதோ ஒரு வலி தோன்றி மறைகிறது.

பள்ளியின் முதல் மாணவியாய் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். என்னை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு பெரியவர் எனக்கு இரு நூறு ரூபாய் சன்மானம் வழங்கினார். அந்தப் பணத்தில் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் ஓய்வறையில் எவர்சில்வர் குடிநீர் பாத்திரம் ஒன்று வாங்கிவைத்தேன். அதை எல்லா ஆசிரியர்களும் பாராட்டியது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. மேலும், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியது, கட்டுரைப் போட்டிகளில் பரிசு வாங்கியது எல்லாம் மறக்க முடியாது”.

 

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *