ஸ்கூல் டே ஜாலி டே! – மனம் திறக்கும் பிரபலங்கள்!

உலகம்

‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்?’’ சில பிரபலங்களைக் கேட்டோம். வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளிலும் கரைந்துவிடாமல் கூடவே பயணிப்பது நம் பள்ளிப் பருவத்து நினைவுகள். எத்தனை உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், நம்மோடு பள்ளியில் படித்த சக நண்பர்களைக் காணும்போது, மீண்டும் ஒரு முறை பள்ளியின் வளாகத்திற்குள் மனதை எட்டிப் பார்க்கச் செய்வோம். பென்சிலைத் தொலைத்து, பேனா மூடியைக் கடித்து, இடைவேளைப் பொழுதுகளில் எச்சில் ஒழுக மிட்டாய் தின்று, நண்பர்களோடு விளையாடியும், பகைத்தும், உறவாடியும் மகிழ்ந்த பொழுதுகள் அவை. புத்தக மூட்டையைச் சுமந்த பால்ய பருவத்தின் நினைவுகள் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட வரலாறுகள். பல்துறை பிரபலங்கள் சிலர் இங்கே தனது பள்ளிக்கூட நினைவுகளை மனம் திறக்கிறார்கள்.

 

இன்றுவரை கடன் வாங்காமல் இருப்பதற்கான காரணம்!

எஸ்.வி.சேகர்

 

“என்னோட பள்ளிக்கூட வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் ஏகப்பட்டது  இருக்கு. இப்பவும் பள்ளிக் குழந்தைகளைக் காணும்போது, என் பள்ளிப் பருவத்து நினைவுகளை மனதுக்குள்ளேயே தாலாட்டிக்கொள்வேன்.

sv.sekar-எஸ்.வி.சேகர்

தஞ்சாவூர்லதான் என் பள்ளிக்கூடத்து வாழ்க்கை ஆரம்பமாயிற்று. இப்போது இருக்கிற மாதிரி ஆங்கிலக் கல்வி முறை அப்போது கிடையாது. தஞ்சை மேல வீதியில் இருக்கிற கொங்கணேஷ்வரர் வித்தியாஸ்ரமத்துலதான் முதல் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் ஒரே ஆண்டில் படித்து முடித்தேன். (சிரிக்கிறார்)

எங்கள் வீட்டுக்கு எதிராகவே இருந்தது அந்தப் பள்ளி. முதல்நாள் வகுப்பில் போய் அமர்ந்தேன். அந்த அறை முழுவதும் கும்மிருட்டு. எனக்கு பயம் வந்துவிட்டது. அழுதுகொண்டே இருந்தேன். ஆசிரியர் வந்து என்னவென்று கேட்க, நான் அழுதுகொண்டே, ‘‘இருட்டென்றால் பயம்” என்று சொல்ல, அப்படீனா ரெண்டாங்கிளாஸ்ல போய் படிக்கிறியானு கேட்டார். நானும்  ‘சரி’ என்று தலையாட்டிவிட்டேன். அப்போதே என்னை இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறையில் கொண்டுபோய் விட்டார். முதல்நாளே எனக்கு ப்ரோமோஷன். மறுநாளிலிருந்து இரண்டாம் வகுப்பு பாடங்களைத்தான் படிக்க ஆரம்பித்தேன்.

அப்புறம் சென்னைக்கு வந்துவிட்டோம். மந்தைவெளியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு சேர்ந்தேன். அப்போதெல்லாம் பென்சில் சீவுவதற்கு வசதியான மாணவர்களிடம் மட்டுமே ஷார்ப்னர் இருக்கும். மற்ற மாணவர்கள் பிளேடுதான் பயன்படுத்துவார்கள். ஒருமுறை பென்சில் சீவிக்கொண்டிருந்த மாணவன் கையில் பிளேடை வைத்துக்கொண்டு இன்னொரு மாணவனை விரட்டிச் சென்றான். நடுவழியில் நான் நின்றுகொண்டிருக்க, என் வலது கையில் அந்தப் பையன் வைத்திருந்த பிளேடு பலமாய்க் கீறிவிட்டது. இரத்தம் தண்ணீர்போல கொட்டித் தள்ள, இரண்டு நாள் விடுமுறை கிடைத்தது. அந்தக் காயத்தின் தழும்பு இன்னமும் என் வலது கையில் விழுப்புண்ணாக உள்ளது.

ஆறாம் வகுப்பு பி.எச் ஹை ஸ்கூல். பல பிரபலங்கள் படித்த பள்ளி அது. சோ.ராமசாமி, ஏ.வி.எம்.சரவணன், மேஜர் சுந்தர்ராஜன் போன்றவர்களெல்லாம் இந்தப் பள்ளியில் எனக்கு சீனியர்களாக படித்தார்கள். கிரேசி மோகன் எனக்கு ஜூனியர். பள்ளிக்கூட நாடகத்தில் நடிப்பதற்காக சோ.ராமசாமி எங்கள் வீட்டில் வைத்துதான் ஒத்திகை பார்ப்பார். அதை நான் போட்டா எடுத்துக்கொண்டிருப்பேன்.

அந்தப் பள்ளியில் சேர்ந்தபோது என்னை ஒரு மாணவன் சென்னை பாஷையில் மிக மோசமாகத் திட்ட, அவனை ஓங்கி அடித்தேன். அவ்வளவுதான் கீழே விழுந்துவிட்டான். நான் அடித்ததும், அவன் விழுந்ததும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நான் ஆறாவது படிக்கும்போது எங்கள் அப்பா ஒரு சலுகை செய்துகொடுத்தார். அதாவது, பாக்கெட் மணி தரமாட்டார். அதற்குப் பதிலாக அவர் கணக்கு வைத்திருக்கும் இரண்டு கடைகளில் எனக்குத் தேவையான சாக்லெட்டு, மிட்டாய்களை வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கும்போது, கடைக்காரர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொள்வார். இதனால், பாக்கெட் மணியை என் பாக்கெட்டுகள் பார்த்ததே இல்லை. பள்ளிக்கூடத்தில் இடைவேளை வரும்போது, எல்லா மாணவர்களும் தங்கள் கையில் உள்ள பைசாவைக்கொண்டு விரும்பியதை வாங்கிச் சாப்பிடுவார்கள். எனக்கு ஏக்கமாக இருக்கும்.

ஒருநாள் துணிச்சலாக ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்த பாட்டியிடம் பத்து பைசா கடன் சொல்லி, ஒரு ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டேன். மறுநாள் டைபாய்டு காய்ச்சல். ஒருமாதம் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை. விடுப்பு முடிந்து மீண்டும் பள்ளிக்கூடம் செல்லும்போது, அந்தப் பாட்டியிடம் செமத்தியாகத் திட்டு வாங்கினேன். ஒரு மாதம் ஆகிவிட்டதால், பத்து பைசாவுக்குப் பதிலாக ஒரு ரூபாய் தரவேண்டும் என பாட்டி என்னை மிரட்ட, எனக்கு பிபீ எகிறிவிட்டது. எப்படி ஒரு ரூபாய் கடனை அடைக்க? என் அப்பாவிற்குத் தெரிந்தால் தோல் உரிந்துவிடும்.

என்றாலும், மனதிற்குள் பல திட்டங்கள் ஓடின. அப்போது என் பாட்டி தன் உடல் சிகிச்சைக்காக தினமும் மாத்திரை சாப்பிடுவார். ஒரு மாதத்திற்கான மாத்திரையை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார். ஒரு மாத சிகிச்சைக்கான மாத்திரையும் ஒரு ரூபாய்தான். மாத்திரை வாங்க இன்னும் இரண்டுநாள் இருக்கிறது. இந்த விஷயம் என் நண்பனுக்கும் தெரியும்.

எனக்கு ஒரு ரூபாய் உடனடியாகத் தேவை என்பதை நண்பனிடம் கூற, ‘‘மவுண்ட் ரோட்டில் இருக்கிற மருந்துக் கடையில் உன் பாட்டி வாங்கும் மாத்திரை ஐம்பது பைசாதான் வரும்” என்று சொல்ல, ஐஸ் கிரீம் பாட்டிக்கு பயந்து என் பாட்டியிடம் சென்று, மருந்துக் கடை மூணு நாள் விடுமுறையாம் எனச் சொல்லி, ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு, மந்தைவெளியிலிருந்து மவுண்ட் ரோட்டிற்கு நடந்தே சென்று, ஐம்பது பைசாவுக்கு மாத்திரை வாங்கி, அதில் ஐம்பது பைசாவை மிச்சம் பிடித்து, வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் இரண்டுபேர் கொடுத்த நாலணாவையும் சேர்த்து ஐஸ்கீரிம் பாட்டியின் கடனை அடைத்தேன். பத்து பைசா ஐஸ்கீரிமிற்காக அப்போதே 90 பைசா கந்து வட்டியாக தண்டம் அழுதேன். அந்த அனுபவம்தான் இன்று வரையிலும் கடனே வாங்காமல் இருப்பதற்குக் காரணம்.

ஆறாம் வகுப்பில்தான் ஏ.பி.சி.டி என ஆங்கிலப் பாடம் படிக்கத் தொடங்கினேன். அதே ஆறாவது வகுப்பு  படிக்கும்போது ஸ்கூட்டர் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். அதுவும் ஒரே நாளில். என் பள்ளிக்கூட அனுபவங்களை வைத்து புத்தகமே எழுதலாம் ’’.

 

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *