ஸ்கூல் டே ஜாலி டே– ஃபாத்திமா பாபு

உலகம்

‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்?’’ சில பிரபலங்களைக் கேட்டோம். வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளிலும் கரைந்துவிடாமல் கூடவே பயணிப்பது நம் பள்ளிப் பருவத்து நினைவுகள். எத்தனை உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், நம்மோடு பள்ளியில் படித்த சக நண்பர்களைக் காணும்போது, மீண்டும் ஒரு முறை பள்ளியின் வளாகத்திற்குள் மனதை எட்டிப் பார்க்கச் செய்வோம். பென்சிலைத் தொலைத்து, பேனா மூடியைக் கடித்து, இடைவேளைப் பொழுதுகளில் எச்சில் ஒழுக மிட்டாய் தின்று, நண்பர்களோடு விளையாடியும், பகைத்தும், உறவாடியும் மகிழ்ந்த பொழுதுகள் அவை. புத்தக மூட்டையைச் சுமந்த பால்ய பருவத்தின் நினைவுகள் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட வரலாறுகள். பல்துறை பிரபலங்கள் சிலர் இங்கே தனது பள்ளிக்கூட நினைவுகளை மனம் திறக்கிறார்கள்.

 

ஒரு மாதத்திற்கு மூன்று ரூபாய் தான் பாக்கெட் மணி

ஃபாத்திமா பாபு

“என்னுடைய பள்ளிப் பருவமும், கல்லூரிப் படிப்பும் முழுமையாக பாண்டிச்சேரியில்தான்.  அதுவும் ஆங்கிலவழிக் கல்விதான். முதல் வகுப்பிலிருந்து பத்தாவது வரை ‘இமாகுலேட் ஹார்ட் ஆஃப் கேர்ள்ஸ்’ உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். முதல் வகுப்பு படிக்கும்போது சுமதி என்கிற என் வகுப்புத் தோழி ஒருத்தி, தன்னுடைய வீட்டில் குதிரை, யானை போன்றவற்றை வளர்ப்பதாகவும், தினமும் அவற்றுடன் நடந்த விஷயங்களைப் பற்றியும் சுவராஸ்யமாகச்  சொல்ல, எனக்கும் குதிரை, யானையை வீட்டில் வளர்க்கும் ஆசை வந்துவிட்டது. இதுபற்றி என் அப்பாவிடம் ஒருநாள் சொன்னேன். அவர் சிரித்தார். ‘‘அந்தப் பொண்ணு பொய் சொல்லியிருக்குமா….அவற்றையெல்லாம் வீட்டில் வைத்து வளர்க்க முடியாது. உங்களிடம் பெருமையாக ஏதாவது கதைவிடவேண்டும் என்பதற்காக, அப்படிச் சொல்லியிருப்பாள். நாளையிலிருந்து நீயும் இதுமாதிரி சொல்லு. அப்போது அவள் பொய் சொன்னது தெரியவரும்” என்றவர், குதிரை பற்றியும், யானை பற்றியும் நிறைய விஷயங்களைச் சொல்லி, அவற்றின் குணாதிசயங்களையும் தெளிவாகச் சொல்லி எனக்குப் புரியவைத்தார். ஏனென்றால், என் தந்தை ஒரு கால்நடை மருத்துவர்.

ஃபாத்திமா பாபு-fathima babu

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, நான்காம் வகுப்பு தமிழ் ஆசிரியர் ஒருநாள் எங்கள் வகுப்பறைக்கு வந்தார். அப்போது நான் தமிழ் பாடத்தை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். என் கையெழுத்து மிக அழகாக இருப்பதைப் பார்த்து, தன் வகுப்பிற்கு என்னை கூட்டிச் சென்றார். “தமிழை எப்படி அழகாக எழுதவேண்டும் என இந்தப் பெண்ணைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு கரும்பலகையில் என்னை எழுதிக்காட்டச் சொன்னார். நான்காம் வகுப்பு மாணவிகள் என் கையெழுத்தைப் பார்த்துவிட்டு அசந்துபோயினர். பள்ளிக்கூடம் முழுவதும் என் கையெழுத்து பிரபலமாகிவிட்டது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது சின்னம்மை நோய் தாக்கி, பரிட்சைக்கு முந்தைய மாதம் பள்ளிக்கூடமே போக முடியாமல் விடுமுறை எடுக்கவேண்டிய நிலை. பள்ளிக்கூடம் போக முடியவில்லை என்றாலும், என் அம்மா ஒவ்வொரு பாடத்தையும் வீட்டிலிருந்தே எனக்கு சொல்லிக்கொடுத்தார். நானும் உடல் சுகவீனத்தோடு அம்மா சொல்லிக்கொடுத்தபடியே பாடங்களைப் படித்தேன். பரிட்சை வந்தது. ஆறாம் வகுப்பின் நான்கு பிரிவுகளையும் சேர்த்து, நான்தான் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்தேன். அதுவரை இரண்டாவது, மூன்றாவது ராங்க் வாங்கிய நான், பள்ளிக்கூடத்திற்கு வராமலே முதல் மாணவியாக எப்படி வந்தேன் என என்னைவிட நன்றாகப் படிக்கும் சாவித்திரிக்கும், ராஜேஸ்வரிக்கும் ஆச்சரியம். அப்போதுதான் என்னுள் இருந்த மனப்பாட சக்தி புரியத் தொடங்கியது.

பள்ளிக்கூடத்தின் வாசலில் சவ்வு மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டதை மறக்க முடியாது. அதுவும் ரோஸ் கலரில், கையில் வாட்ச் மாதிரி சவ்வு மிட்டாயைக் கட்டிக்கொண்டு, சிறிது நேரம் கழித்து அதைச் சுவைத்து மகிழ்ந்தது எல்லாம் கண்முன்னே இப்போது வந்து நிற்கிறது. பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே ஒரு கடை. அந்தக் கடையில் விற்பனையாகும் கமர்கட் மிட்டாய் மிகச் சுவையாக இருக்கும். அந்தக் கடைக்காரரின் வீடும் கடையை ஒட்டியே இருந்தது. கமர்கட் மிட்டாயை அங்கேயே தயாரிப்பாளர்கள். அப்படித் தயாரிக்கும்போது ஒரு வாசனை வரும் பாருங்கள். வாய் முழுக்க எச்சில் ஒழுகும்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது கண்ணகி நாடகத்தை பள்ளியில் நடத்தினோம். நான்தான் அந்த நாடகத்தில் கண்ணகியாக நடித்தேன். மேலும், அந்த நாடகத்தின் இயக்குநரும் நான்தான். கண்ணகியின் வேடத்தில் நடிக்கும் எனக்கு கருப்பு புடவை தேவைப்பட்டது. எங்கள் வீட்டில் கருப்பு புடவை இல்லை. என் அம்மா “எப்படியாவது வாங்கித் தந்துவிடுகிறேன்” என்றார். நானும் கருப்பு புடவை இல்லாமலே பலநாள் ஒத்திகையெல்லாம் முடித்துவிட்டேன். இறுதி நாளும் வந்துவிட்டது. நாடகம் மாலை நடக்கவிருக்கிறது, காலைவரை கருப்பு புடவை என் கைக்கு வந்துசேரவில்லை. மத்தியானம் என் அம்மா கருப்பு புடவை ஒன்றை வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அப்போது அவரின் ஒருகையில் புடவையும், இன்னொரு கையில் வீட்டிற்கு சமைப்பதற்காக நண்டுகளும் இருந்தன. ‘’அம்மா….இது என்ன நண்டுகளோடு புடவை கொண்டு வந்திருக்கீங்க….இங்கிருந்து உடனே கௌம்புங்க…யாராவது பார்த்தா சிரிக்கப்போறாங்க” என அம்மாவை நாடகத்தை பார்க்கவிடாமல் விரட்டிவிட்டேன்.

அதன்பிறகு பின்னாளில் நாடகத்துறையில் நுழைந்து, ஏராளமான நாடகங்களில் நடித்தபோதும், ஒருமுறைகூட நான் மேடையில் நடிப்பதை என் அம்மா பார்க்கவே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் அன்னையர் தினத்தில்தான் முதன்முதலாக நான் மேடையில் நடிப்பதைப் பார்த்தார்.

ஒரு மாதத்திற்கு மூன்று ரூபாய்தான் பாக்கெட் மணி. அதையும் மொத்தமாகக் கொடுத்துவிடுவார் அப்பா. அந்த மூன்று ரூபாய்க்குள் அடங்கிப்போனது என் பள்ளிப்பருவத்து செலவுகள். சில மாதங்களில் அதிலும் கொஞ்சம் சேமித்து வைத்துவிடுவேன். இப்போது நினைத்துப் பார்த்தால், அது ஒரு கனாக்காலமாகத்தான் இருக்கிறது.

 

பாலமுருகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *