பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் வெளியேறுகிறாரா?

slider அரசியல்

பீகாரில் ஜக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார். இவரது கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. பா.ஜ.க.வின் ஆதரவுடன் இவரது ஆட்சி பீகாரில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது சமூகப் பின்னணி கொண்ட கொள்கை ரீதியிலான சில முடிவுகளில் பா.ஜ.க.வுக்கும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும் மோதல்கள் வருவது உண்டு.  இது தேர்தல் கணக்கிலும் எதிரொலிப்பது உண்டு. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே பா.ஜ.க.வை கூட்டணியிலிருந்து வெளியேற்ற ஐக்கிய ஜனதா தளம் சில முயற்சிகளை எடுத்திருக்கிறது. இது பா.ஜ.க,வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

NitishKumar-நிதிஷ்குமார்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே நிதீஷ்குமார் ஒவ்வொரு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போதும், ஒவ்வொருவிதமான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.  குறிப்பாக, பீகாரில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.யுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இக்கூட்டணியும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இது அப்போது  பா.ஜ.க.வுக்கு பெரும் தோல்வியாக  தேசிய அளவில் கருதப்பட்டது. ஆனால் ஆர்.ஜே.டி.யுடனான கூட்டணியை கொஞ்சநாளிலே திடீரென முறித்துக் கொண்டு நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தார். அது இப்போதுவரை நடந்து கொண்டிருக்கிறது.

இதற்குமுன்பு 2014 –ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியை பா.ஜ.க. கட்சி தங்களது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர்தான் நிதீஷ்குமார். இதையெல்லாம் மறந்துவிட்டுதான் இப்போது நிதீஷ்குமார் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவளித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுக்கு 17 இடங்களைத்தான் பீகாரில் நிதீஷ் குமார் கட்சி ஒதுக்கியது. இதற்கு  அப்போது பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் சமாதானமாகி கூட்டணி உருவாகி தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றியையும் பீகாரில் பெற்றனர். இதன்பின்னர், இரண்டாவது முறையாக மோடி தலைமையில் அமைந்த மத்திய அமைச்சரவையில் நிதீஷ் குமார் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கூடுதல் இடம் கேட்டு அமைச்சரவையில் இடம்பெறமாட்டோம் என்று அறிவித்தார் நிதீஷ் குமார்.  இதுதான் தற்போதைய நிலை.

இந்நிலையில், தற்போது பீகார் தலைநகர் பாட்னாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலைக்கு முன்னாள் பிரதமர் நேரு பெயரை சூட்டியிருக்கிறார் முதல்வர் நிதிஷ்குமார்.   சமீபமாக, ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் கொள்கையை கூட்டணி கட்சியும், ஆளுங் கட்சியுமான பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துவரும் நிலையில் நிதிஷ்குமார் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளவும் தயார் என்கிற  நிதீஷ் குமாரின் வெளிப்பாடு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *