நாங்குநேரி இடைத் தேர்தல் – தடுமாறும் தமிழக காங்கிரஸ்

slider அரசியல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் தி.மு.க. நேரடியாகவே போட்டியிடுவதற்குத்தான் முதலில் நினைத்தது. ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து “நாங்கள் பாரம்பரியமாக போட்டியிட்டு வெற்றிபெறும் தொகுதி என்பதால் விட்டுக் கொடுக்க முடியாது” என்று கண்டிப்புடன் கூறியதால், தி.மு.க. பின்வாங்கியது. இவ்வளவு கஷ்டப்பட்டு தொகுதியை தி.மு.க.விடமிருந்து காங்கிரஸ் வாங்கியும் அதற்கு வேட்பாளரை அறிவிப்பதில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது காங்கிரஸுக்கு மிகவும் முக்கியம். தோற்றால் அதைவிட இழுக்கு வேறு எதுவுமில்லை. ஆகவே, இந்தத் தொகுதியில் செலவு செய்ய ஏறக்குறைய 20 கோடி வரை காங்கிரஸ் தரப்பில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கு ஏற்ற ஒருவரைதான் வேட்பாளராக அறிவிக்க தமிழக காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதில் இன்னொரு நெருக்கடியும் காங்கிரஸுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சம் ஒன்றரை வருஷம் தான் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு பலரும் போட்டியிட யோசிக்கிறார்களாம். செலவு செய்ய நிர்ணயித்துள்ள தொகை மற்றும் குறுகிய கால பதவி ஆகிய இந்த இரண்டு விஷயமும் தான் இவர்களை ரொம்பவும் யோசிக்க வைக்கிறதாம்.

இந்த இழுபறியால் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தாமதமாகிறதாம். கடைசியாக, காங்கிரஸ் பிரமுகர்களான  ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாம். இருவருமே வசதியானவர்கள். ஊர்வசி அமிர்தராஜ் சென்னையில் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். பெரும் தொகையை செலவிட தயாராகவும் இருக்கிறாராம்.

கன்னியாகுமரியை சேர்ந்த ரூபி மனோகரன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் பெரியளவில் செலவழிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த இருவரில் ஒருவர் விரைவில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாங்குநேரி தொகுதிக்கு அ.தி.மு.க. தனது வேட்பாளரை அறிவித்து, அமைச்சர்களை எல்லாம் பிரசாரத்துக்கு அனுப்ப முடிவு எடுத்து, பல கோடிகளை இறைத்தாவது எப்படியாவது நாங்குநேரியில் வெற்றிபெற வேண்டும் என்று  தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்த்து களம் காணவேண்டிய தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸோ வேட்பாளரை தேர்வு செய்யவே இவ்வளவு தடுமாறினால், அது தேர்தல் வெற்றியை பாதிக்கவும் செய்யலாம் என்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *