பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. கொடுத்த இடைத்தேர்தல் பரிசு!

slider அரசியல்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி அன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில் புதுச்சேரியிலுள்ள காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டில் உள்ள நாங்குநேரியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் நிர்பந்தம் செய்தது தமிழக பா.ஜ.க. ஆனால், சட்டமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் பலம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதால், நாங்குநேரி தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்ட அ.தி.மு.க., அதற்குப் பதிலாக இப்போது புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கி, பிரச்னையை சமாளித்துவிட்டது.

இந்த விவகாரத்தில் வெளிப்படையாக புதுச்சேரி பா.ஜ.க.வுக்கு காமராஜ்நகர் ஒதுக்கப்பட்டது என்று அ.தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்படவில்லையென்றாலும், தாங்கள் ஒதுங்கிய வகையில் பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாகவே அர்த்தப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, தங்கள் போட்டியிடும் விருப்பத்தையும், வேட்பாளர் பட்டியலையும்  டில்லியில் உள்ள மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர் புதுச்சேரி பா.ஜ.க.வினர். மேலும்,  இங்கு பா.ஜ.க. சார்பில் களமிறங்க பெரும் போட்டியே நிலவுகிறது. விரைவில் டில்லியிலிருந்து காமராஜ் நகருக்கு பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று புதுச்சேரியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் சொற்ப பலத்தில் ஆட்சி செய்து வருவதால், தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும், தங்களது கூட்டணியிலுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஒரு சீட்டைகூட ஒதுக்க முடியாத நிலையில் தான் அ.தி.மு.க. கட்சி இருந்து வருகிறது. இதனாலே தமிழக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நாங்குநேரியை அ.தி.மு.க. தலைமையால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், புதுச்சேரியில் நிலைமை அப்படியில்லை. இந்த வகையிலே புதுச்சேரியில் பா.ஜ.க. போட்டியிட அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *