சி.பி.ஐ விசாரணை வளையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர்!

slider அரசியல்

   தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அப்போது முதல்வராகவிருந்த குமாராசாமியால் பெங்களூரு போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர் அலோக் குமார். இந்த அலோக் குமாரிடம் எம்.எல்.ஏ.க்கள் போன்களை ஒட்டுக் கேட்பு நடவடிக்கையின்பேரில் இன்று (செப்டம்பர் 26-ம் தேதி) சி.பி.ஐ. விசாரணையை துவக்கியுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரசாமி ஆட்சிக்கும் அரசுக்கும் எதிராக சில மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரும், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் பதவிகளை ராஜினாமா செய்ய ஆரம்பித்தனர்.  இது குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கத் தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த குமாரசாமி சொன்னதன்பேரில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க காவல்துறைக்கு அலோக்குமார் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Kumaraswamy-alok kumar

இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் வழக்காக பதிவானது. நீதீமன்றத்தின்  உத்தரவின்பேரில்  கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன் அடுத்தகட்டமாகவே இன்று அலோக்குமார் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட பெங்களூருவிலுள்ள அலோக்குமாருக்கு தொடர்புள்ள பல்வேறு இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அலோக் குமார் தற்போது கர்நாடகா காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐ.யால் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலோக் குமாரிடமிருந்து இந்த வழக்கின் முடிச்சு முன்னாள் முதல்வர் குமாரசாமி வரை செல்லலாம் என்றும், ஒருவேளை இந்த வழக்கிற்காக குமாரசாமி சி.பி.ஐ.யால் விசாரிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி ஒரு நடவடிக்கை அமையுமானால் அது கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை உருவாக்கலாம்.

 

நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *