கண்மணி குணசேகரன் கவிதைகள்

இலக்கியம்

கவிதைகள்

kanmani gunasekaran

குயில்போல் கூவ
பழகிக்கொண்டதா யொருவன்
கூவினான்.
உடன் பக்கத்து வேம்பில்
கூவிக்கொண்டிருந்த அது-
நிறுத்திவிட்டது.
கூடவே தன்னிடமது
தோற்றுவிட்டதாகவும்
பின்னாளில் தன்போல் கூவ
பழகிக்கொள்வதாகவும்
எங்கும் கூவிக்கொண்டிருந்தான்.

———-

சீய்க்கவும் பொறுக்கவும்
சிறிதே பழகியிருக்கிற குஞ்சுகள்.
குழப்பத்திலும்
குற்ற உணர்சியிலுமாய் கோழி.
தனித்துவிட்டு வா யென
புறக்கணிக்கவே முடியாதபடி
அழைத்துக்கொண்டேயிருக்கிறது…
அண்மையில்
அறிமுகமாயிருக்கிற சேவல்.

——–
கடைசி உருண்டையையும்
வாயில் போட்டுக்கொண்டு
கையைக்
கழுவிய போதுதான்…
ஏமாற்றத்தில்
எழுந்த நாய்-
சாடையாய்…
வீட்டுக்குள்
ஒரு நோட்டம் விட்டது.
—–

விடிந்தும்
விட்டு விலகாத
கூடற் கணங்களில் மிதந்தவள்…
ஊற்றிய செடிக்கே
மீண்டும் தண்ணீரை ஊற்றுகிறாள்.

மகிழ்வில்
முந்தானைப் பற்றி நீட்ட
மற்றுமொரு
பூவில்லையே யென்கிற
வருத்தம் அதற்கு.!
——-

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *