ரஜினி – பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் மர்மம்?

slider அரசியல்
rajinikanth-ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்கிற செய்தி அவ்வப்போது கேட்பதும் பின்னர் அடங்கிப் போவதும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அதே வரிசையில் இப்போதும் ஒரு தகவல் புறப்பட்டிருக்கிறது. இந்தமுறை அரசியல் நிபுணராக சொல்லபடும் பிரசாந்த் கிஷோரை சமீபத்தில் ரஜினி சந்தித்துள்ளதால், இந்தப் பேச்சு அதிகமாகவே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் எல்லாக் கட்சிகளும் அணுகத் தொடங்கியுள்ள அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்து பேசியுள்ளார். அது மட்டுமல்ல, இவர்கள் சந்திப்பில், தான் அரசியல் கட்சி தொடங்கவுள்ளது குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கலந்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் இப்போது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள், “தலைவர் ரஜினி கட்சி தொடங்க தயாராகி விட்டார். எல்லாம் ரெடியான பின்னர் கட்சி தொடங்கவே அவர் பெரிதும் விரும்பினார். இப்போது அவர் விரும்பியபடி கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. இதையடுத்து தான் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடனும் அவர் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.  துவங்கவுள்ள கட்சியை பிரமாண்டமான முறையில் மக்களிடம் அறிமுகம் செய்து வைக்க ரஜினி விரும்புகிறார். இதற்காக அவர் மதுரையை செலக்ட் செய்துள்ளார்.  மதுரை அரசியலுக்கு மிகவும் சென்டிமென்ட்டான ஒரு நகரம். எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய  வெற்றியை கொடுத்தது மதுரைதான். எம்.ஜி.ஆரைப் போலவே விஜயகாந்த்தும் இங்குதான் கட்சியை ஆரம்பித்தார். கமலும் இங்குதான் கட்சியை ஆரம்பித்தார். இவர்கள் வரிசையில் தலைவர் ரஜினியும், மதுரையை தேர்ந்தெடுத்துள்ளார்.   பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் தலைவர். இதில்தான் தனது கட்சியை அறிவிக்கப் போகிறார். இதன் பிறகு அவரது அரசியல் பயணம் அதிரடியாக இருக்கும். வரும் சட்டசபைத் தேர்தலில் முன்பே கூறியபடி 234 தொகுதிகளிலும் எங்கள்  கட்சி தனித்துப் போட்டியிடும். மக்களைக் கவரும் வகையிலான, மக்களுக்கான, ஆன்மீக அரசியலை தலைவர் ரஜினி முன்னெடுப்பார்’’ என்றனர்.

 

prashant-kishor – பிரசாந்த் கிஷோர்ஒரே இயக்குநர் படத்தில் ஒரே சமயத்தில் ரஜினியும் நடிக்கலாம். கமலும் நடிக்கலாம். இது நடந்தும் இருக்கிறது. மறைந்த இயக்குநர் ராஜசேகர் ரஜினியை வைத்து  ‘மாவீரன்’ படத்தையும், கமலை வைத்து  ‘விக்ரம்’ படத்தை ஒரே சமயத்தில் இயக்கினார். ஒரு பொங்கலன்று அந்த இரண்டு படமும் ரிலீஸும் ஆனது. அது சினிமா. ஆனால், பிரசாந்த கிஷோர் ஏற்கெனவே கமல் கட்சியின் மக்கள் நீதி மய்யத்துக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருப்பதாக தகவலும் கசிந்திருக்கிறது. இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்கவும், ஆட்சி பிடிக்கவும் அதே பிரசாந்த கிஷோரிடம் ஆலோசனை கேட்பதுதான் புரியாத மர்மமாக இருக்கிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *