பா.ஜ.க.வின் அடுத்த பொறியில் சிக்கும் வி.வி.ஐ.பி

slider அரசியல்
sarathpawar-சரத்பவார்

இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மூன்றில் மகாராஷ்டிரா பெரிய மாநிலம் மட்டுமல்ல, மத்தியில் ஆளுங்கட்சியாகவுள்ள பா.ஜ.க.வுக்கும், எதிர்க் கட்சியாகவுள்ள காங்கிரஸுக்கும் அரசியல் முக்கியத்துவம் அதிகம் ஏற்படுத்தும் மாநிலமாகவும் இது இருக்கிறது. ஆகவே, இந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் பெரும் பலத்துடன் மோதுவது வாடிக்கை. இங்கு காங்கிரஸின் கூட்டணி கட்சியாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது அமலாக்கத்துறை சரத் பவார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இது காங்கிரஸ் முகாமில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ajith pawar-அஜீத் பவார்

இந்த வழக்கு பின்னணி குறித்து கொஞ்சம் அலசுவோம். முன்பு தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், மாநிலத்திலுள்ள  கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான, சர்க்கரை ஆலைகளை மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்த வகையில் மோசடி நடைபெற்றுள்ளதாக போட்டப்பட்ட வழக்கை அங்குள்ள நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.25,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி விற்பனை செய்யப்பட்ட  பல கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கியவைதான். ஆனால், அதன் இயக்குநர்களால்  ‘ரிசர்வ் விலைக்குக் கீழே’ அவை ரொம்பவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இது ஆலைகளை வாங்கியவர்களுக்கு பெரும் லாபத்தை அளித்தது என்றும்,  இந்த சர்க்கரை ஆலைகளில் பலவற்றுடன் சரத் பவார் மற்றும் அவரது மருமகனுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழலின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  மத்திய அமலாக்கத்துறை இந்த வழக்கில் சரத் பவார், அவரது  மருமகன் அஜித் பவார் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 288. இதில் சரிபாதி எண்ணிக்கையில் தொகுதிகளை பிரித்துக் கொண்டு காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூட்டணி ஒப்பந்தம் போட்டு தேர்தலை சந்திக்கவுள்ள இந்த சமயத்தில் சரத்பவார் மீது அமலாக்கத்துறை மோசடி வழக்கு பதிவு செய்திருப்பதால், தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இதன் பின்னணியில் இந்தமுறை ஆட்சியை பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று கலக்கமடைந்துள்ளன இந்த இரு கட்சிகளும் என்கிறது மகாராஷ்டிராவிலிருந்து வெளிவரும் தகவல்கள்.

ஏற்கெனவே காங்கிரஸைச் சேர்ந்த ப.சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். இப்போது பா.ஜ.க.வின் இன்னொரு முக்கிய அரசியல் எதிரியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மீதும் அமலாக்கத்துறை மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வேகம் எடுத்தால், ப.சிதம்பரம் போல் சரத்பவாரும் கைது செய்யப்படலாம். ஆகவே, பா.ஜ.க.வின் அடுத்த குறியாக சரத்பவார் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்கிற பேச்சும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

  -தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *