துணிச்சலுடன் புது முகங்களை களமிறக்கிய அ.தி.மு.க

slider அரசியல்
விக்கிரவாண்டி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்து மூன்றாவது ஆண்டு வரவிருக்கிறது. அவரது மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் கொஞ்ச காலம் முதல்வரக இருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று இப்போது அவரது தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் சொற்ப பலத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதால், தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும், அதனை அ.தி.மு.க. முழுவீச்சுடனே எதிர் கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தலையும் அ.தி.மு.க. தலைமை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தே சந்திக்க களம் இறங்கியுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிக்குமான வேட்பாளர்களை அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்ச் செல்வன் என்பவரையும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுதிக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் என்பவரையும் களம் இறக்கியிருக்கிறது.

இந்த இரு வேட்பாளர்களுமே கட்சியில் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள் தான். “எங்கள் அம்மா முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி சொல்வதுபோலவே, யாருக்கு, எப்போது பதவி வரும் என்பது தெரியாது.  ஆனால், உழைப்பவர்களுக்கு சரியான நேரத்தில் பதவி வரும்” என்கிறபடியே இவர்களுக்கு கட்சித் தலைமையால் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் அ.தி.மு.கவினர். மேலும்,   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே அடிக்கடி அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்றுதான் சொல்வார்கள். இதற்கேற்றது போலவே, அவரின் வழியில் இவர்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

நாங்குநேரி வேட்பாளர் நாராயணன்

இதற்கு இன்னொரு உதாரணமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தொகுதிக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைசர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கலாம் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ஆனால் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தது அ.தி.மு.க. தலைமை. கூட்டணி கட்சியான பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு சீட்டை ஒதுக்கியது அ.தி.மு.க. தலைமை. இப்போது, நாங்குநேரியில் கூட, திருநெல்வேலியில் செல்வாக்கு பெற்ற முன்னாள் அமைச்சர் மனோஜ் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் என பெரிய புள்ளிகள் பெயர்கள் அடிபட்டது. ஆனால், புதுமுகமான  நாராயணன் என்பவராக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முத்தமிழ்செல்வன் தேர்வும் இதுபோலத்தான். பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைவிட மிகக் குறைந்த அளவே அ.தி.மு.க கூடுதலான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சி நடத்தி வரும் நிலையில், இப்படியான அதிரடி முடிவுகளை எடுப்பதற்கு கண்டிப்பாக ஒரு தைரியம் தேவைதான். அந்த வகையில், அ.தி.மு.க. தலைமை தொடர்ந்து தனது தனித்துவத்தை காப்பாற்றி வந்துக் கொண்டிருக்கிறது என அ.தி.மு.க. தலைமை வட்டார தகவல் சொல்கிறது.

அ.தி.மு.க. சார்பில் அந்தக் கட்சியின் வழக்கப்படி புதுமுகங்கள் களம் இறக்கப்பட்டிருந்தாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய இடத்தில் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் என்னவுள்ளது என்பது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தான் தெரியவரும்

 நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *