விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டி?

slider அரசியல்

 

UDHAYANIDHI – உதயநிதி

தமிழகத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி அன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி போட்டியிட வேண்டுமெனக் கோரி பொன்முடி மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி, தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், மக்கள் நீதி மையமும் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இதன்படி இரண்டு தொகுதியிலும் மும்முனை போட்டி நிலவ அதிக வாய்ப்பிருக்கிறது. இது இடைத் தேர்தல் என்பதால், நாம் தமிழர் கட்சியால் பரபரப்பையும், குறிப்பிடத் தக்க வாக்குகளை மட்டுமே பெறமுடியும். அப்படியென்றால், தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே தான் கடும் போட்டி நடைபெறவுள்ளது. பொதுவாக, இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிகள் வெற்றி பெறுவதே அதிகமாக நடக்கக்கூடியது. அந்த வகையில் இரண்டு அ.தி.மு.க. வெற்றிபெற அதிக வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக, விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது. இங்கு தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அதேநேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பா.ம.க.வுக்கு தனி செல்வாக்கு உண்டு. சென்றமுறை பா.ம.க. இங்கு தனித்து போட்டியிட்டே 40,000 வாக்குகளுக்கு மேல் வாங்கியிருக்கிறது. வெற்றிபெற்ற தி.மு.க.வுக்கும், இரண்டாம் இடம் வந்த அ.தி.மு.க.வுக்கும் இடையே 8,000 வாக்குகள் தான் வித்தியாசம். இப்போது பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. ஆகவே, இந்த கணக்கின்படி அ.தி.மு.க. வேட்பாளர் எளிதில் வெற்றிபெற அதிக வாய்ப்புண்டு,

இப்படியான சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, உதயநிதி போட்டியிட மனு அளித்திருந்தாலும், தி.மு.க. தலைமை யோசிக்கவே செய்யும். மேலும், உதயநிதி போட்டியிடவுள்ள முதல் தேர்தல் என்பதால் இப்படியொரு  கடும் பரீட்சைக்கு ஸ்டாலினும் ஒத்துக் கொள்ள மாட்டார், அவரது குடும்பமும் ஒத்துக் கொள்ளாது. ஆகவே, இதையெல்லாம் வைத்து ஆலோசிக்கையில், உதயநிதி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு ரொம்பவே குறைவு என்றே தோன்றுகிறது.

நிமலன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *