நெருங்குகிறதா தி.மு.க.வும் பா.ஜ.க.வும்?

slider அரசியல்
Kanimozhi – tamilisai

கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்ட கனிமொழியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க.வின் சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்டார்.  இதில் கனிமொழி வெற்றிபெற்று தமிழிசை தோல்வி அடைந்தார்.  உடனடியாக கனிமொழியின் இந்த வெற்றியை எதிர்த்து தமிழிசை சௌந்தர்ராஜன் சார்பில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்போது தெலுங்கானா கவர்னராக தமிழிசை சௌந்தர்ராஜன் இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது கனிமொழி மீது போடப்பட்ட வழக்கை தமிழிசை சௌந்தர்ராஜன் வாபஸ் பெற்றுள்ளார்.

தமிழிசை தரப்பில், தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் அவரது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியே தமிழிசை சௌந்தர்ராஜனும் அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், “ஒரு வேட்பாளரின் சொத்து விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட வேண்டும். மேலும், கனிமொழி தனது பிரச்சாரத்தின் போது தனக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு ரூ 2 ஆயிரம் வழங்கியுள்ளார். ஆகவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனு இன்று (23-9-2019) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக. இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து தெலுங்கானா கவர்னரான தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், “கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன். வழக்கை வாபஸ் பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை’’ என்று  விளக்கமளித்துள்ளார். இந்த வழக்கின் மீதான இறுதி முடிவு அக்டோபர்-14 ம் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கவர்னர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட ஒன்று. அந்த பதவிக்கு சென்ற பின்னர், தமிழிசை சௌந்தர்ராஜன், தான் தேர்தலில் போட்டியிட்ட வழக்கை வாபஸ் பெற்றது பாராட்டத்தக்கது. இது அவரது கவர்னர் பதவிக்கு மேலும் பெருமை சேர்க்கும். இதில் இன்னொரு கோணமும் பார்க்க வேண்டியிருக்கிறது. சில வாரங்களாக தேசிய அளவிலும், தமிழக அளவிலும் தி.மு.க. – பா.ஜ.க. இடையே புது உறவு பூத்து வருவதாகவும், காங்கிரஸிடமிருந்து தி.மு.க. மெல்ல மெல்ல விலகி வருவதாகவும் பேச்சு கிளம்பியிருக்கிறது. ஒருவேளை இதன் ஒரு பகுதியாகக்கூட கனிமொழிக்கு எதிரான வழக்கை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெற்றுள்ளது நடந்திருக்கலாம் என்கிற அனுமானத்தையும் அவ்வளவு எளிதில் உதறி தள்ளிவிட முடியாது.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *