நாங்குநேரியை அ.தி.மு.க.விடம் கேட்டு மிரட்டும் தமிழக பா.ஜ.க.!

slider அரசியல்
பா.ஜ.க – அ.தி.மு.க

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாகவிருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் என்று அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணிக்கை அக்டோபர் 24-ம் நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சென்றமுறை அ.தி.மு.க. போட்டியிட்ட நாங்குநேரி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட முனைப்பு காட்டுவதால், அ.தி.மு.க. முகாம் அதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை தி.மு.க. கூட்டணியில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டியில் தி.மு.க.வும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை தி.மு.க. பெற்று வருகிறது. இதேபோல், நாங்குநேரியில் போட்டியிட விரும்புவோரிடமும் காங்கிரஸ் கட்சி விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

ஆனால், அ.தி.மு.க .கூட்டணியில் சென்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வே போட்டியிட்டது என்பதால், அதன் அடிப்படையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் அ.தி.மு.க. விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நாங்குநேரியில் தாங்கள் போட்டியிட விரும்புவதாக அ.தி.மு.க.வின் இரட்டை தலைமையிடம் தமிழக பா.ஜ.க. கூறியிருக்கிறதாம். இதனால் அதிர்ந்து போய்விட்டதாம் அ.தி.மு.க. இரட்டைத் தலைமை.  இரண்டு தொகுதிகளிலுமே தங்கள் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களைப் பெற்று வரும் சூழலில், இப்படி ஒரு  திடீர் குண்டை பா.ஜ.க. போடுகிறதே என்று அ.தி.மு.க. முகாமில் பேரதிர்ச்சி நிலவுகிறதாம்.

நாங்குநேரி தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிறது. அங்கு எப்போதும் தேசிய கட்சிகளுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அந்த வகையில் காங்கிரஸைப் போன்று பா.ஜ.க.வுக்கும் அங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்து வருகிறது. இதன்படி தமிழக பா.ஜ.க.வோ, நாங்குநேரியில் நயினார் நாகேந்திரன் அல்லது பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவரை நிறுத்தி வெற்ற பெறச் செய்து, தமிழக சட்டசபைக்குள் பா.ஜ.க. மீண்டும் காலடி வைப்பதன் மூலம் அரசியல் எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைக்கிறதாம்.

ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஆட்சி என்பது சொற்ப பலத்தில்தான் நடந்து வருகிறது. இதில் ஒரே ஒரு சீட்டைக்கூட எந்த ஒரு கூட்டணி கட்சிக்கும் கொடுக்கும் நிலையில் அது இல்லை. ஆகவே, விரைவில் இது சம்பந்தமான பஞ்சாயத்து டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *