
இந்திய கிரிக்கெட்டின் பிரபலமும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், தோனி ஓய்வு குறித்து கூறியுள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக உலகப் கோப்பையை வாங்கி கொடுத்த தோனிக்கு இப்போது 38 வயது ஆகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரிலிருந்தே தோனி ஓய்வு குறித்த பேச்சுக்கள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியது. இந்த பேச்சுக்களுக்கு இதுவரை தோனி வாய்திறந்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வருகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் பலரும் தோனி ஓய்வு குறித்து அவரே தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பி.சி.சி.ஐ. அவரிடம் ஓய்வு குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் தான் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கவாஸ்கர், தோனி ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர், “தோனி மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்திய கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் என்ன என்பதை அவர் தான் கூற வேண்டும். அவருக்கு 38 வயது ஆகிறது என்பதால், இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு அடுத்து யார், என்ன என்பதை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், அடுத்த டி-20 உலகக்கோப்பை வரும் போது அவருக்கு 39 வயது ஆகி இருக்கும். அணிக்கான அவரது மதிப்பும் பங்களிப்பும் எப்போதும் அட்டகாசமாக இருந்துள்ளது. அவர் எடுக்கும் ரன்கள் மட்டும் அல்ல, அவரது ஸ்டம்பிங் கூட. அவரது ஒட்டுமொத்த இருப்பு கேப்டனுக்கு அமைதியை அளிக்கிறது. கேப்டனும் அவரது ஆலோசனைகளால் பயன் பெறுகிறார். அது மிகப் பெரிய பலன். இருந்தாலும், அவருக்கான நேரம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் ஓய்வு காலம் உள்ளது. அதை தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக, அவருக்கு முழு மதிப்பு அளித்து நான் நம்புகிறேன். வெளியே தள்ளும் முன் அவராகவே ஓய்வு பெறுவார் என நம்புகிறேன். அவரது விதிமுறைகளின் படி அவரே ஓய்வு பெற வேண்டும்” என்றும் ஊடகம் ஒன்றில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
பி.சி.சி.ஐ. வெளியே தள்ளும் முன் அவராகவே ஓய்வு பெற வேண்டும் என்று தோனி குறித்த கவாஸ்கர் கூறியுள்ள இந்த கருத்து தேசிய அளவில் ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் பெரும் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
எஸ்.எஸ்.நந்தன்