விஜய் அரசியல் பேசுவது இதற்காகத்தான் – வைகைச் செல்வன் அதிரடி!

slider அரசியல்

 

vaigaiselvan – வைகைச் செல்வன்

ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மூலம் நடிகர் விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்திருக்கும்  ‘பிகில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பின்னணியில் இது நடைபெற்றிருக்கிறது. வைகைச் செல்வனின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் மீதான அ.தி.மு.க.வின் இந்தத் தாக்குதலை பல்வேறு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ’பிகில்’ ஆடியோ விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் விஜய், பல்வேறு பேச்சுக்களுக்கு மத்தியில், சமீபத்தில் பேனர் விழுந்து இறந்துபோன சுபஸ்ரீ மரணம் குறித்தும் பேசினார். அப்போது, “இந்த மரணத்தில் யார் யாரையோ கைது செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஆளை கைது செய்யவில்லை. உட்கார வேண்டியவங்களை உட்கார வேண்டிய இடத்தில் உட்கார வைத்தால் எல்லாம் சரியாகிவிடும்’’ என்று விஜய் பேசியதற்குதான்   அ.தி.மு.க. தரப்பிலிருந்து வைகைச் செல்வன் மூலம் பதிலடி கொடுக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டு திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்துதான் சுபஸ்ரீ இறந்து போனார் என்பதும் கவனிக்கத்தக்கது.

பிகில் பட பாடல் வெளியீட்டில் விஜய்

நடிகர் விஜய் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய செய்தி வெளியாகி பரபரப்பானவுடனே ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வைகைச் செல்வன், “திரைப்படங்கள் 20 நாளுக்கு மேல் ஓடுவதே சிரமமாக உள்ளது. திரைப்படங்களை பரபரப்புக்கு உள்ளாக்க அரசியல் தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் கதையை நம்பி படம் எடுத்ததால் நீண்ட காலம் படம் ஓடியது. ஓராண்டுவரையெல்லாம் ஓடிய வரலாறு உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. கதையே இல்லாத படத்தை எடுத்துவிட்டு இரண்டு மாத காலத்திற்கு ஓட்டுவதற்குதான் இதுபோன்ற விழாக்களில் அரசியல் பேசப்படுகிறது. இப்படி பரபரப்புக்கு உள்ளாக்கி, படத்தை ஓட வைப்பதில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிகர் விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். இப்படித்தான் சமீபகாலமாக அவரது படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.  மக்கள் யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே தான் வைக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். மக்கள் யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே தான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் வரையில், அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம். அ.தி.மு.க. அரசு அடுத்தடுத்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து பத்து வருட காலமாக அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பத்து வருடங்களாக விஜய் படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவருக்கு எந்த தொல்லையும் தரப்படவில்லை என்பது தானே உண்மை. ஆனால், தனது படங்களை ஓட வைப்பதற்காக இதுபோன்ற விழாக்களில் விஜய் பரபரப்புக்கு பேசி வருகிறார்’’ என்று பேசியுள்ளார்.

இந்தப் பேச்சு குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு விவாதங்கள் கிளப்பியுள்ளன. குறிப்பாக, இதற்கு முன்பாக விஜய் நடித்திருந்த  ‘சர்கார்’ படத்திலும் அ.தி.மு.க.வை குறிவைத்து விமர்சனம் செய்யும் காட்சிகள் பல இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து இப்போது மேடையில் அரசை இப்படி விமர்சிக்கும் வகையில் விஜய் பேசியிருப்பதால்தான், அ.தி.மு.க. தரப்பிலிருந்து பதிலடி தரப்பட்டிருக்கிறது என்றும், அதேநேரத்தில் கொஞ்சநாளாக விஜய்யின் போக்கில் தி.மு.க.வுக்கு ஆதரவான சாய்வு தென்படுவதையும் மறுக்க முடியாது என்றும் விவாதங்கள் செய்யப்படுகின்றன.

இதில் ஒரு சின்ன ஃபிளாஷ்- பேக்கும் உண்டு. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம், தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி களத்தில் இறங்கி வேலையும் செய்தது. இடையில் ஒரு பத்து ஆண்டு கழித்து நடைபெறவுள்ள 2012 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி விஜய் மக்கள் இயக்கம் வேலையும் செய்யும் நிலையும்கூட ஏற்படும் ஏற்படலாம்.

 

தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *