நீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு

slider அரசியல்
தஹில் ரமணி – thakil ramani

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமணி சில வாரங்களுக்கு முன்பு மேகாலயா  மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக   இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி தஹில் ரமணி தன் பதவியை கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தார். இது  தேசிய அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமணி கடந்த 9-ம் தேதி முதல் உயர்நீதி மன்றத்துக்கு வரவில்லை.  இதனால் அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார்.

இப்படியான ஒரு நிலையில்  இன்று (செப்டம்பர் 18-ம் தேதி) தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   தலைமை நீதிபதி தஹில் ரமணி மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் செயலகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் கற்பகம் மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் சத்திய நாராயணன்,  சேஷசாயி அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா? என அறிவிக்கப்படும் என்றனர்.

பொதுவாக இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை இடமாற்றம் செய்து கொலிஜியம் உத்தரவிட்டது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில் ரமணி அமர்த்தப்படுவதற்குகுமுன் அவர், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக 17 ஆண்டுகள் பணியாற்றினார். அதேபோல் சில காலம், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் அமர்த்தப்பட்டார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்றுது முதல், இப்போதுவரை வழக்கு விசாரணை முறையாக செல்வதாகவே வழக்கறிஞர்கள் பலரும் கூறுகிறார்கள். இதன் மூலம், தஹில் ரமணி மீது எந்த சர்ச்சையும் இல்லை என்பது தெரிய வருகிறது. சுப்ரீம் கோர்ட் வழிக்காட்டுதல்படி பணி இடமாற்றப்படும் தலைமை நீதிபதி மீது சர்ச்சைகள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதியின் விருப்பமில்லாமல் பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்பது மரபு.

இதுகுறித்து கேள்வி எழுப்பி தஹில் ரமணி கொலிஜியத்துக்கு அனுப்பிய கடித்துக்கும் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. அதேபோல், 25 நீதிபதிகளை நிர்வகித்து வரும் பொறுப்பில் இருக்கும் இவரை, இப்போது 3 பேரை மட்டும் கொண்ட மேகாலயாவுக்கு மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

இதேபோன்ற சம்பவம் முன்னாளில் கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயந்த் படேலுக்கு நடந்தது. அவர் கர்நாடகத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கும் முறையான காரணங்களை கொலிஜியம் வழங்கவில்லை. இதனால், படேல் தனது எதிர்ப்பை வெளிகாட்ட நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வாயிலாக இன்னும் அதிக தூரம் பயணிக்கும் என்றும், முடிவில் இதுபோல அடுத்த சம்பவங்கள் நடைபெறாமல் இருந்திட உச்சநீதிமன்றம் தகுந்த வழிகாட்டுதல்களை வகுக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *