கிரண்பேடியாக மாறும் தமிழிசை

slider அரசியல்

 

தெலுங்கானா கவர்னராக தமிழிசை

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், அண்மையில்தான் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்படார்.  ஏற்கெனவே புதுசேரியில் கவர்னராக கிரண்பேடி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்பது, அரசு அலுவலகங்களில் திடீர் விசிட் அடிப்பது என்று செயல்பட்டு வருவது நடந்துள்ளது. இவரது நடவடிக்கைகள் வழக்கமான கவர்னர்கள் போல் இல்லாமல் இருந்ததால் பரபரப்பானது. இதுபோல், தெலுங்கானாவில் தமிழிசையும் இப்படி நடந்து கொள்வார் என்கிற செய்தி தெலுங்கானா மாநிலத்து மக்களின் சமூக வலைதளங்களில் இப்போது வெகுவேகமாக டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

வருகிற 2023-ம் ஆண்டு தெலுங்கானாவில்  சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அத் தேர்தலில் எப்படியேனும் ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்கிற நோக்கில் பா.ஜ.க. தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. இதற்காக அங்குள்ள கட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்களையும் செய்யத் தொடங்கிவிட்டது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. அதன் ஒரு முக்கிய அங்கமாகத்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவராக திறம்பட செயல்பட்ட தமிழிசை சவுந்தரராஜனை கவர்னராக நியமித்த நடவடிக்கை என்கிறது பா.ஜ.க.வின் டெல்லி வட்டாரம்.

தெலுங்கானாவில் இயங்கிவரும் மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர், “நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்” என்று கவர்னர் தமிழிசையிடம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

தமிழிசை சௌந்தர்ராஜன்

 

இப்படி தெலுங்கானாவில் கிரண்பேடியாக தமிழிசை சவுந்தரராஜன் நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் பல்வேறு திசைகளிலிருந்தும் தென்பட தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக இந்த விஷயம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. “கவர்னரின் அதிகாரித்தை மீறும் செயல். தெலுங்கானாவில் பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா?” என்று பலர் கவர்னர் தமிழிசையை சமூக வலைத்தளங்களில் கேள்வி  எழுப்பி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு தெலுங்கானாவில் அமோக வெற்றி பெற்று முதல்வராகியுள்ள சந்திர சேகர ராவுக்கு இந்த விஷயங்கள் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெலுங்கானாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் புதுச்சேரி போன்று தெலுங்கானாவிலும் கவர்னரின் நடவடிக்கைகள் பிரபலமடையலாம். அப்போது ஊடகங்கள் தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானாவின் கிரண்பேடி என்று அடைமொழியிட்டு அழைக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *