எங்களை யாராலும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ். அதிரடி

slider அரசியல்
பன்னீர்செல்வம் – panner selvam

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே பெரிய பனிப்போரே நடந்துவருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், “முதல்வரையும் என்னையும் பிரிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது தமிழக அரசியலிலும், அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 17-ம் தேதி)  பத்திரிகையாளர்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர், ‘”பத்திரிகையாளர்கள் தான் முதல்வரையும் என்னையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது. முதல்வருடன் கருத்து வேறுபாடு என்பதெல்லாம் பொய்யான தகவல்’’  என்று கூறினார்.

 

ops with eps

 

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மேலும் பேசுகையில்,  ‘’தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே உள்ளது. இந்தக் கொள்கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது. மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடத்தவுள்ளோம். இதில் எந்த அரசியலும் இல்லை.  முந்தைய தி.மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சித் தலைவராக  முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்தபோது, பலமுறை அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் அப்போது அளிக்கப்படவில்லை. அதை மறந்துவிட்டு இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார். மேலும், கூவம் ஆற்றை புணரமைக்கும் பணிகள் தொடர்பாக 2009-ல் சிங்கப்பூர் சென்று வந்த ஸ்டாலின், அதற்கு பிறகு எந்த விளக்கத்தையும் தரவில்லை. கருப்பு பணத்தை முதலீடு செய்வதற்காக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள் எனக் கூறப்படுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதை ஏற்க முடியாது’’ எனவும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் துணை முதல்வர் கூறினார்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று பிரிந்தபோது, சசிகலா அணியில் இருந்தவர் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், அடுத்தடுத்து சில சம்பவங்களால் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாகி ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வரானார். ஆனாலும், இதுவரை ஓ.பன்னீர் செல்வத்தை தவிர பன்னீர் செல்வம் அணியில் இருந்த முக்கிய பிரபலங்களுக்கு ஆட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படாத நிலையே தான் இருந்து வருகிறது. இதுமாதிரியான வேறு சில விவகாரங்களிலும் முதல்வருக்கும், துணை முத்லவருக்கும் இடையே பிணக்கு இருந்து வருவதாலே, இருவருக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக பத்திரிகையில் தகவல் வந்துக் கொண்டிருந்தன.

இப்போது இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட ஓ.பன்னீர் செல்வமே “எனக்கும், முதல்வருக்குமிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்களை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் பலிக்காது” என்று கூறியிருப்பது அ.தி.மு.க. முகாமை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்றும், இதில் வேறு ஏதோ திரைமறைவு அரசியல் பின்னணிகள் இருக்கலாம் என்றும், இதற்காகவே ஓ.பன்னீர் செல்வம் இப்படியொரு வார்த்தையை சொல்லியிருக்கிறார் அல்லது சொல்ல நேரிட்டதுள்ளது என்றும், இதுபற்றிய தகவல் விரைவில் வெளிவரலாம் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *