தி.மு.க. கூட்டணிக்கு புறப்பட்டுவிட்டாரா ஜான்பாண்டியன்?

slider அரசியல்
ஸ்டாலினுக்கு சால்வை போர்த்தும் ஜான்பாண்டியன்

இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துவரும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் திடீரென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று (செப்டம்பர் 11-ம் தேதி) மதுரையில் சந்தித்து பேசியுள்ளார். தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வருபவரான ஜான்பாண்டியன், தி.மு.க. தலைமையை தேடிச் சென்று பார்த்துள்ளது கூட்டணியிலுள்ள அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்களை புருவம் உயர்த்திட  வைத்திருக்கிறது.

செப்டம்பர் 11-ம் தேதியான நேற்று தியாகி இம்மானுவேல் சேகரனின் தினம் கொண்டாடப்பட்டது. இவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பரமக்குடி சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இதன் நிமித்தம் மதுரையில் உள்ள சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு வந்த ஜான்பாண்டியன் மு.க.ஸ்டாலினுடன் ஏறக்குறைய 15 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த சந்திப்பில்,  முன்பு பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கும் ஸ்டாலினிடம் ஜான்பாண்டியன் ஆதரவு கோரினாராம். அதேபோல் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்ததற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டாராம். இந்தச் சந்திப்பின் போது கனிமொழி எம்.பி.,  தி.மு.க.;வின் தென்மண்டல செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ஜான்பாண்டியனின் நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, ”ஜான்பாண்டியனுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் இந்த அரசாங்கத்தால் எந்த பலனும் இல்லை.  அவர் சார்ந்த சமுதாய மக்களின் நலனுக்காக தமிழக அரசிடம் வைத்த பல கோரிக்கைகள் கூட கிடப்பில் தான் உள்ளன. இதனால் இனியும் அ.தி.மு.க.வை மட்டுமே நம்பி பயனில்லை என்பதை அறிந்து தளபதியை சந்தித்திருக்கிறார்’’ என்றனர்.

இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது வரவுள்ள சட்டமன்ற கணக்குகளை முன்வைத்து நடத்தப்பட்டதாகவே அரசியல் நோக்கர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

-தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *