குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

slider அரசியல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் சென்றதிலிருந்தே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறைகூறி வந்தார். இந்நிலையில், “ஸ்டாலினுக்கு குறை சொல்வது ஒன்று தான் நோக்கம். குறுகிய மனம் படைத்தவர் அவர்”  என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் சொல்லியுள்ளார். முதல்வரின் இந்த பதில் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

கடந்த கொஞ்சநாளாகவே முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எழுப்பி வருகிறார். அதில் முக்கியமாக வெளிநாட்டு முதலீடு ஈர்த்தது பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

இப்படியான சூழலில் நேற்று (செப்டம்பர் 11-ம் தேதி) முதல்வர் சேலம் பயணம் மேற்கொண்டார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், முதல்வரிடம், “தி.மு.க. தலைவர் வெளிநாட்டு முதலீடு ஈர்த்தது பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளாரே?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர், “அவர்களது ஆட்சிக் காலத்தில் வெறும் 26 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் ஜெ. முதல்வராக இருந்தபோது 2015ம் ஆண்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் ஈர்த்துள்ளார். 53 ஆயிரம் கோடி ரூபாயில் 27 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 67 தொழில் நிறுவனங்கள் தொடங்கும் நிலையில் உள்ளன. பெரிய தொழில் தொடங்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். இதுகூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் உள்ளார்.

நான் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு குறைசொல்வது ஒன்று தான் நோக்கம். நான் வெளிநாடு சென்றபோது 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 8835 கோடி ரூபாய் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர்.  35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். எந்த திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்தி விட முடியாது. வெள்ளை அறிக்கை வெளியிட்டால் பாராட்டுவதாக கூறும் அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டு தான். குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின். வெளிநாடுகளில் இருப்பது போல ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை இங்கும் செயல்படுத்த உள்ளோம். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை. புதிய தொழில்கள் துவங்க உகந்த மாநிலம் தமிழகம்’’ என்று பதிலளித்தார்.

பிரதான எதிர்க்கட்சி என்கிற முறையில் தி.மு.க.வும், அதன் தலைவர் ஸ்டாலினும் எழுப்பும் அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் சாராத குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் முதல்வரிடமிருந்தும் சாட்டையடி போன்ற பதில்களும் வரத் தொடங்கியிருக்கின்றன என்பதற்கு முதல்வரின் இந்த பதிலை முக்கியமானதாக சொல்லலாம் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

  • நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *