தி.மு.க.தான் எங்களுக்கு எதிரி – தினகரன்

slider அரசியல்
தினகரனுடன் பழனியப்பன்

அ.ம.மு.க. கட்சியைவிட்டு பல முக்கியத் தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு சென்ற வண்ணமுள்ளனர். கடந்த சில தினங்களாக தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியும் அ.ம.மு.க.வைவிட்டு வேறு கட்சிக்கு செல்வதான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “கட்சியை விட்டு சென்றவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும்’’ என்று பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (செப்டம்பர் 11-ம் தேதி) அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது.  தற்போது இங்கு மழைபெய்து உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து சிலர் பிரிந்து சென்று வேறு கட்சிக்கு சென்று உள்ளனர். கட்சியை விட்டு சென்ற அவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும். அ.ம.மு.க.வில் உள்ளவர்களுக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் கட்சியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். இன்று திருமணம் காணும் மணமக்கள் என்.ஏ.விஜய்ஆனந்த்- எம்.பி.யாழினி வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும்’’ என்று கூறினார்.

இதேபோல் நேற்று (செப்டம்பர் 11-ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினத்தை முன்னிட்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார் டி.டி.வி. தினகரன்.

அப்போது தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் தி.மு.க. எங்களுக்கு எதிரிக்கட்சி . என்னை தி.மு.க.வில் இணைவார் என்று சொல்பவர்கள் தான், பாதுகாப்பு கருதி விரைவில் தி.மு.க.வில் இணைவார்கள்.  கடந்த இடைத்தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு தான். பரிசுப் பெட்டகத்தில் விழுந்த வாக்குகள் எங்கு சென்றது? என்று தெரியவில்லை. வரும் தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை அமைக்கும்போது, பாதுகாப்பு கருதி ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் தி.மு.க.வின் பக்கம் செல்வார்கள். தி.மு.க. எங்களுக்கு எதிரி. எடப்பாடி அன் கோ எங்களுக்கு துரோகிகள். முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை மனம் இருந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடலாம். முதல்வர் இஸ்ரேல் சென்று வந்தாவது தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிலை நாட்டட்டும். துரித உணவு மாதிரி உடனடியாக பதவி சுகம் தேடி வந்தவர்கள் அ.ம.மு.க.வை விட்டு விலகிச் சென்று இருக்கிறார்கள். 95 சதவீதம் நிர்வாகிகள் எங்களோடுதான் இருக்கிறார்கள். ஒருவர் வெளியே சென்றால், நூறு பேர் உள்ளே வருவார்கள். முதலமைச்சர் வெளிநாடு பயணம் எட்டாவது உலக அதிசயம் சாதனை என சொன்ன அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒன்பதாவது உலக அதிசயம்’’ என்று கூறினார்.  இந்நிலையில் இன்று (செப்டம்பர் 12-ம் தேதி)  நடிகர் செந்திலுக்கு அ.ம.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரே நாளில் இருவேறு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரனிடமிருந்து வெளிப்பட்ட இந்த பேச்சுக்களில் இருந்த தீவிரம் அவர் மீண்டும் பழைய பரபரப்பு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார் என்பதற்கான உதாரணங்கள் என்கிற கருத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒருசாராரிடம் பேசப்படுகிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *