ரகசியம் பேசிய ஓ.பி.எஸ்.!

slider அரசியல்
எடப்பாடியுடன் ஓ.பி.எஸ்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பினார். முதல்வர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பில் மிஸ்ஸிங் ஆன ஒரே தலைவர் துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் என்கிற தகவல் தமிழக அரசியலில் மட்டுமல்ல, அ.தி.மு.க.விலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்குமென்று அ.தி.மு.க.வினர் மத்தியில் பல்வேறு பேச்சுக்களும் கிளம்பின. இந்நிலையில், நேற்று ( செப்டம்பர் 10-ம் தேதி) முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமியை வீடு தேடிச் சென்று சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

நேற்று திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி வீட்டுக்கு ஓ.பன்னீர் செல்வம் கார் சென்றது. அப்போது காலை 11 மணி . இந்த சந்திப்பு சுமார் 12.30 மணிக்கு மேல் தான் முடிந்தது. இந்த சந்திப்பில் கட்சியினர், அதிகாரிகள் என்று யாரும் உடன் இல்லையாம். கிட்டதட்ட ஒன்றரை மணிக்கு மேல் இருவரும் ரகசியமாக பேசியுள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இவ்வளவு நீண்ட நேரம் சந்தித்து பேசியதே இல்லையாம். இன்னும் சொல்லப் போனால் அ.தி.மு.க. ஒன்றாக இணைந்தபிறகு போதுகூட இவ்வளவு நேரம் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதில்லையாம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மீது அடுக்கடுக்காக புகார்கள் வருகின்றன. மேலும் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவையும் இந்த ஆண்டு கூட்ட வேண்டிய நிர்பந்தம் உள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. எனவே இந்த மூன்று விஷயங்கள் குறித்தும்தான் இருவரும் முக்கிய முடிவுகள் எடுத்திருப்பார்கள் என்கிறார் அ.தி.மு.க. தலைமை கழக  நிர்வாகிகள் சிலர்.

ஒரு நாள் அளவுக்கு நீடித்த இந்த விவகாரம் அடுத்த நாளிலே சாதாரண விஷயமாக முடிந்துபோனது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரு வெடிப்பாக நிகழ வேண்டிய ஒரு பெரும் பரபரப்பை நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

  • தொ.ரா.ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *