சின்னம்மா சசிகலா சொன்ன ரகசியம்!

slider அரசியல்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்துவரும் சின்னம்மா சசிகலாவை சந்தித்து அ.ம.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களை சொல்லியுள்ளனர் சில நிர்வாகிகள். அவர்களிடம் சின்னம்மா சசிகலா, “நான் வெளியே வந்தால் கட்சியில் உள்ள அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும். அதுவரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசியலையே பரபரப்பாக்கி அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வைத்திருக்கிறது.

அ.ம.மு.க.விற்கு பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் பொறுப்பேற்ற பிறகு அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதேபோல், அ.ம.மு.க.வின் தேர்தல் தோல்விக்கு பிறகு, அக் கட்சியில் இருந்து ஏராளமானோர் மாற்று கட்சியில்  இணைந்தனர். மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களின் மாவட்டங்களில் நடக்கும் பிரச்னைகளை கட்சி தலைமையிடம் தெரிவிக்க முற்பட்ட போதும், அது நிராகரிக்கப்பட்டதாகவே இருந்தது. தொடர்ந்து, தலைமையின் மேல் உள்ள அதிருப்தி  காரணமாக இசக்கி சுப்பையா, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், கட்சியின் செய்தி தொடர்பாளரும், சசிகலாவின் ஆதரவாளருமான புகழேந்தி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்த வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியானதை அடுத்து புகழேந்தி கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியில் உள்ள பலரும் தினகரன் மேல் உள்ள அதிருப்தி காரணமாக தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாக  கூறப்படுகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பின்னரே அ.ம.மு.க.விலிருந்து இசக்கி சுப்பையா, தங்க.தமிழ்ச் செல்வன் என்று ஒருவர் பின் ஒருவராக முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்வது நடந்து வருகிறது. இப்போது செய்தி தொடர்பாளர் புகழேந்தியும் கட்சியைவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலர்,   கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை  சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் சின்னமா சசிகலா அவர்களிடம், “உங்களுக்காகவே நாங்கள் அமைதியாக  இருக்கிறோம். எங்களை சந்திக்க டிடிவி.தினகரன் மறுக்கிறார். குறைகளை கேட்க மறுக்கிறார். இதனால், கட்சிப் பணிகள் அனைத்தும் முடங்கிப்போய் உள்ளது. தன்னுடைய ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கட்சியில் உள்ள  மற்றவர்களை அவர் நிராகரிக்கிறார்’’ என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அமைதியாகக் கேட்ட சின்னம்மா சசிகலா,  “நான் ஓரிரு மாதத்தில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. நான் வெளியே வந்தால் கட்சிப் பிரச்னைகள்  அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே, அனைவரும் அதுவரையில் அமைதியாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறிப்பிட்ட நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவின் வருகைக்காக அமைதியுடன்  காத்திருப்பதாகவும், மேலும்,  தினகரன் மேலுள்ள அதிருப்தியை சசிகலாவிடம் மனுவாக அளிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும், சின்னம்மா சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும்’ எனவும்’’ அ.ம.மு.க. கட்சி வட்டாரங்கள்   தகவல் தெரிவித்துள்ளன.

ஒருவேளை அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினரால் சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலா இன்னும் ஒரிரு மாதங்களிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி துவக்கத்திலோ சிறையிலிருந்து விடுதலையாகும் பட்சத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

  • நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *