கைதாவாரா ஐஸ்வர்யா?

slider அரசியல்
சிவக்குமார் மகள் ஐஸ்வர்யா

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இப்போது சிவக்குமாருக்கு அடுத்த இடியாக அவரது மகளுக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. கொஞ்சநாளாகவே இதுபோன்ற தொடர்ச்சியான நிகழ்வுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு , கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியிலுள்ள சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய்  சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய  பணம் குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்கும் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில், சில தினங்களுக்கு முன்பு முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார்.  அவரிடம் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர்.

இதன்பின்னர்  டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 600 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான சிவக்குமார் அவரது மகள் ஐஸ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவக்குமார்

இந்நிலையில்,  நாளை ( செப்டம்பர் 12-ம் தேதி)  விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை  சம்மன் அளித்துள்ளது. பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை இந்த சம்மனை அளித்தனர்.

ஏற்கெனவே தந்தை விசாரணை காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் அவரது மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஆஜராகச் சொல்லியிருப்பதன் பின்னணி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அதில் மகளிடம் பெறும் வாக்குமூலத்தை வைத்தே சிவக்குமார் விஷயத்தில், அமலாக்கத்துறை அடுத்த என்ன செய்யவுள்ளது என்பது முடிவாகும்!

  • விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *