ரஜினியை ஆதரிக்க தயார் – சீமான் தடாலடி அறிவிப்பு!

slider அரசியல்

 

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போது ரஜினியை பற்றி பேசினாலும் அது பரபரப்பாகிவிடும். அதுபோலவே இப்போது “ரஜினி கர்நாடகாவிலோ, மராட்டியத்திலோ கட்சி ஆரம்பித்தால் நான் ஆதரிப்பேன்’’ என்று பேசியிருப்பதும் தமிழகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், “அவரை எதிர்க்க ஐயாம் வெயிட்டிங்’’ என்று சொல்லியிருந்தார். இந்தப் பதில் அப்போது பெரும் விவாதங்களையும், பரபரப்புகளையும் ஏற்படுத்தியது.

சமீபத்தில் மீண்டும் எழுத்து ஊடகம் ஒன்றில் சீமானிடம், “விஜய், சூர்யா, சிம்பு ஆகியோரை அரசியலுக்கு அழைப்பது பற்றியும், அதேநேரத்தில் ரஜினியை எதிர்ப்பது ஏன்?’’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சீமான்,  “ரஜினி 50 ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வுபெறுகிற காலத்தில், நான் ஆட்சிக்கு வந்து உங்களிடம் அதிகாரத்தைச் செலுத்துவேன் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? ஒரு நடிகராக எங்களை மகிழ்விப்பது வேறு, தலைவனாக இருந்து எங்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துவது வேறு. அதை எந்த தன்மானம் உள்ள தமிழராலும் ஏற்க முடியாது. ‘அவரு ரொம்ப நல்லவர்’ என்று சிலர் பேசுகிறார்கள். யார் இங்கே நல்லவர்? தன்னுடைய சொத்துக்களை விற்று அந்தக் காலத்தில் நம் மக்களுக்கு அணையைக் கட்டிகொடுத்த பென்னி குக்கை ஏன் விரட்டினீர்கள்? வெள்ளைக்காரன் என்றுதானே? விஜய், சூர்யாவை நான் வரவேற்கிறேன் என்றால், அவர்கள் இந்தத் தமிழ் மண்ணின் மகன்கள். ரஜினி  தான் வளர்ந்த கர்நாடகவிலோ, தன் இனத்தவர்கள் வாழும் மகாராஷ்டிரத்திலோ போய் கட்சி ஆரம்பிக்கட்டும். தமிழகத்தில் பிரபலமாக இருந்தாலும் கர்நாடகாவில் நடந்த தேர்தலில்தான் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். அவரை நாங்கள் எதிர்த்தோமா? இப்போதும் அதே அன்புடன் இருப்பதோடு அவரை ஆதரிக்கவும் செய்தோமே?  அதேபோல ரஜினி கர்நாடகாவிலோ, மராட்டியத்திலோ கட்சி ஆரம்பித்தால் நான் ஆதரிப்பேன். அங்குள்ள தமிழ் மக்களையும்கூட ரஜினிக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கேட்பேன். அப்படி அல்லாமல் தமிழினத்தை ஆளத் துடித்தால், அதை ஏற்க முடியாது” என்று அதிரடியாக பதில் தந்துள்ளார்.

அரசியல் களத்தில் ரஜினி – சீமான் மோதல் மேலும் மேலும் அனலை கிளப்பும் திசையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *