புகழேந்தி விவகாரம் பற்றி டி.டி.வி. தினகரன் புது விளக்கம்

slider அரசியல்

 

டி.டி.வி.தினகரன்

 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு விசுவாசமாக இருந்துவந்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி திடீரென சில தினங்களாக தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து வெளிவந்த செய்தியால் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. இதில் அடுத்தகட்டமாக, “எதுவாக இருந்தாலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று டி.டி.வி. தினகரன் தற்போது அறிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு புகழேந்தி பேசிய பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. அதில் டி.டி.வி. தினகரனைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார் புகழேந்தி. குறிப்பாக, “14 ஆண்டுகள் முகவரி இல்லாமல் இருந்த டி.டி.வி.தினகரனை நான் தான் அடையாளம்  காட்டினேன்” என்றும், “ஜெயலலிதா இறந்தபோது கூட அவர் அங்கு இல்லை” என்றும் பேசுவதான வசனங்களும் இடம்பெற்றிருந்தன.

இப்படி டி.டி.வி. தினகரன் மீது விமர்சனம் வைத்து பரவிவரும் சமூக வலைத்தள விவகாரம் குறித்து கடந்த (செப்டம்பர் 9-ம்தேதி) தனியார் டி.வி. சேனல்களில் செய்திகள் வர ஆரம்பித்தது. சில சேனல்கள் புகழேந்தியை தொடர்பு கொண்டு பேசுவதும், அதற்கு சமூக வலைத் தளங்களில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டதோடு, இங்கேயும் தினகரன் மீது விமர்சனம் கூறும் போக்கிலேயே பதிலளித்தார் புகழேந்தி.

புகழேந்தி

உடனடியாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், “புகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் மன நிலையில் இருப்பதாக’’  வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 10-ம் தேதி) திருச்சி வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனிடம், புகழேந்தி பேசிய வீடியோ விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தினகரன், “அ.ம.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அ.ம.மு.க.வில் இருந்து சிலர் விலகிச் செல்கிறார்கள். அவர்கள் சொந்த விருப்பத்திற்காகவும், சுயநலத்துக்காகவும் செல்கிறார்கள். அதை நான் துரோகம் என்று சொல்லமாட்டேன். புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. அதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நடக்கும் சம்பவங்களை ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எதுவாக இருந்தாலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தங்க தமிழ்ச்செல்வன், என்னை விமர்சனம் செய்து பேசியதால்,  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று கூறினார்.

தினகரனை விமர்சனம் செய்த புகழேந்தி அந்தக் குற்றச்சாட்டில், அ.ம.மு.க.வின் ஐ.டி.விங்க் பற்றிதான் அதிக குறைகளையும், விமர்சனங்களையும் கூறியிருந்தார். அதை வைத்துப் பார்த்தால், அ.ம.மு.க. என்னும் கட்சிக்கு வெளியில் இருந்து எந்த எதிர்ப்புகளும் வராத நிலையில், அவர்களின் சொந்த கட்சிக்குள்ளே எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் இருக்கிறது என்றும், இதனை ஆரம்பித்திலே சரிசெய்யாவிட்டால் அந்தக் கட்சிக்கு அது பெரும் சரிவை ஏற்படுத்துவதாகவே அமைய அதிக வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் களத்தில் பேச்சு சூடுபிடித்துள்ளது.

 

தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *