தி.மு.க.வினர் பற்றி துரைமுருகன் பகிரங்க குற்றச்சாட்டு!

slider அரசியல்

 

 

 

ஸ்டாலினுடன் துரைமுருகன்

தி.மு.க.வின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “தி.மு.க.வினர், தங்களது வீட்டுக் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை” எனச் பேசியிருப்பது தி.மு.க. கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

செப்டம்பர் 9-ம் தேதி அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு துரைமுருகன் பேசும்போது, “தற்போது தி.மு.க.வினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கான அடையாளமே போய்விட்டது. ஆங்கிலம் பேசுவது தவறு இல்லை. எந்த மொழியிலும் பேசலாம். இப்போது ஓட்டல்களில் எல்லாம் வட இந்தியர்கள் தான் வேலை செய்கின்றனர். அவர்களிடம் இந்தியில் பேசினால்தான் புரிகிறது. அதனால், பல்வேறு மொழிகளைக் கற்று கொள்வதில் தவறு இல்லை. அதேசமயம், தமிழ் உணர்வை விட்டுவிடக்கூடாது. தமிழ் உணர்வையும், சுயமரியாதை உணர்வையும் ஊட்ட வேண்டிய நிலையுள்ளது. ஆங்கிலேயர்கள் தான் ஜனநாயக உணர்வை நமக்கு ஊட்டினர். ஆங்கிலேயர்கள் வரவில்லை என்றால், சோமாலியா போல் இந்தியா ஆகியிருக்கும். ஆனால், நம்முடைய எதிரிகள் வேறுவிதமான உணர்வை நமக்கு ஊட்டுகிறார்கள். இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும்’’ என்று அதிரடியாகப் பேசினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி தமிழ் உணர்வுக்கு மதிப்பில்லை என்கிற குற்றச்சாட்டை கூறிவரும் அரசியல் சூழ்நிலையில், தி.மு.க.வின் பொருளாளரே இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும்விதமாக பேசியிருப்பது கட்சிக்கு பின்னடைவாக அமையக்கூடும் என்கிற அர்த்தத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருப்பதாகவும், இதற்கான எதிர்வினை ஸ்டாலினிடம் என்னவாக இருக்கும் என்பது விரைவில் தெரிய வரலாம் என்று சொல்கிறார்கள் தி.மு.க.வின் தலைமை நிர்வாகிகளில் சிலர்.

நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *