கதையை நம்பி படம் எடுங்கள் – நடிகர் ஸ்ரீகாந்த்!

slider சினிமா
ஆர்யா

சென்ற வருடம் உலகம் முழுவதும் கதிகலங்க வைத்த செல்போன் பயங்கரம் தான் புளூவேல். தமிழ்நாடு உட்பட உலகின் பல நாட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த அகோர மரண விளையாட்டினால் பரிதாபமாக பலியாகிப் போயினர். இந்த உண்மை சம்பவத்தை கருவாகக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘புளூவேல்’! இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்துள்ளார்.

‘புளுவேல்’ படத்தின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார். அப்போது அவர், ‘’ஆந்திராவிலும், கேரளாவிலும் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சரியில்லை என்று எல்லோரும் சினிமாவை குறை கூறுகிறார்கள். நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை. முதலில் நம் வீட்டில் ஒற்றுமை இருக்க வேண்டும். எப்போது நமக்குள் ஒற்றுமை இல்லையோ, அப்போது நம்மை அடுத்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள், கதையை நம்பி படமெடுங்கள். அதேபோல், நல்ல இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தால் அதை அதிர்ஷ்டமாக கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களைக் குறை கூறக்கூடாது. சினிமாவை சரிசெய்தால் தான் மக்கள் ஆர்வத்தோடு வருவார்கள். மக்களை கட்டாயப்படுத்த முடியாது. பிடித்திருந்தால் அவர்களே வந்து பார்ப்பார்கள். ஒவ்வொரு மாதமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிறது. திரையரங்க உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? ஒரு படத்தைத் தூக்கிவிட்டு இன்னொரு படத்தை போடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்களை குறைகூறுவது சரியல்ல. இது நம்முடைய துரதிர்ஷ்டம்’’ என்று பேசினார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் இந்த பேச்சுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

  • தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *