விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

slider அரசியல்
பிரதமர் மோடியுடன் சிவன்

இந்தியாவும், உலகின் பெரும்பாலான நாடுகளும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த  ‘சந்திராயான் – 2’ ராக்கெட் விண்கலம், கடந்த 6-ம் தேதி நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நிலவில் தனது விக்ரம் லேண்டரை தரை இறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி சில நிமிடங்களில் அதனோடு உண்டான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விஞ்ஞானிகள் மட்டுமல்ல, இந்தியாவே கலங்கிப் போனது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வரலாற்று நிகழ்ச்சியாக இது விளங்கும் என்கிற நம்பிக்கையில்,  பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெங்களூரு சென்றிருந்தார். தங்களது பெரும் உழைப்பும், கனவும் கடைசிமுனையில் நழுவிப் போனது குறித்து கவலை கொண்டிருந்த நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், குறிப்பாக இஸ்ரோ தலைவர் சிவனுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறிய காட்சிகள் பார்ப்பவர் யாவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

ஆனால், இந்திய விஞ்ஞானிகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஆர்பிட்டர், நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வுக் கருவிகளும், நிலவின் தரைப் பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பதால், மாயமான லேண்டரைப் பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்து கிடப்பதை தற்போது ( செப்டம்பர் 8-ம் தேதி அன்று) ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது.

இதன் அடுத்தகட்டமாக, நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக, நிலவின் சுற்று வட்டப்பாதையில் 100 கி.மீட்டர் தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டரின் தொலைவை 50 கி.மீட்டராக குறைக்க இஸ்ரோ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதற்கான பணிகள் துவங்க ஓரிரு நாட்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

 

 

 

சிவனுக்கு ஆறுதல் சொல்லும் மோடி

 

 

நிலவில் லேண்டரின் ஆயுள்காலம் 14 பூமி நாட்கள்தான் (நிலவில் அது ஒரு நாள்). எனவே, லேண்டர் தற்போது விழுந்து கிடக்கும் நிலவின் தென்துருவ பகுதியில் 14 நாட்கள்தான் சூரிய ஒளி படும். லேண்டரில் உள்ள சூரிய ஒளி தகடுகளின் மூலமே அதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். ஏற்கனவே மூன்று நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் 11 நாட்கள்தான் அந்தப் பகுதியில் சூரிய ஒளி படும். ஒருவேளை லேண்டர் நொறுங்காமல் இருந்து அதில் உள்ள சூரிய ஒளி தகடுகள் செயல்படும் நிலையில் இருந்தால், இன்னும் 11 நாட்களுக்கு லேண்டருக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் லேண்டரை கண்டுபிடித்தும், அதனால் எந்த பயனும் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

சந்திராயான் -2 ராக்கெட் விண்கலம்

 

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,   “30 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்றோம். கடைசி கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. இதை 95 சதவீத வெற்றி எனலாம். மொத்தத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை எட்டிவிட்டோம். சந்திரயான் 2 சிக்கலால் பணிகள் பாதிக்கப்படவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த அடுத்து வரும் 11 நாட்களும் முழு நம்பிக்கையோடு முயற்சிப்போம். இணைப்பு கிடைத்தால் அதன் பிறகு வழக்கமான ஆய்வுப் பணிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.நந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *