கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் – வரவேற்கும் மக்கள்!

slider அரசியல்

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மிகவும் பெரிதாக ஒலித்த குரல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பண விவகாரம். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மோடி, பா.ஜ.க. வென்று மத்தியில் ஆட்சியமைத்தால், சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவோம் என்றும், அப்படி கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலெல்லாம் பேசினார்.

அந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வென்று பிரதமராக மோடி ஆட்சியமைக்க, இந்த வாக்குறுதியும் முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு மோடி அரசு சுவிட்சர்லாந்து நாட்டுடன் கறுப்பு பண விவகாரம் சம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தைகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டதன் விளைவாக, தற்போது கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக விளங்கி வருகிறது. இந்த வங்கிகளில் கணக்கு துவங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப் படுவது இல்லை. அதனால் கறுப்பு பண முதலைகள் ஏதாவது ஒரு அடையாளத்தின் அடிப்படையில் கணக்கு துவங்கி தங்கள் சொந்த நாட்டில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்குவது வழக்கம். இதனால்தான், நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

சுவிஸ் அதிகாரிகள் தற்போது அளித்துள்ள பட்டியல் விபரத்தில், வங்கி கணக்கு எண், கணக்கில் இருக்கும் நிலுவைத் தொகை, எங்கிருந்து பணம் வருகிறது என்பது போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளது.

சுவிஸ் வங்கி

 

இந்தியாவுக்கும் – சுவிட்சர்லாந்துக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி சுவிஸ் நாட்டின் ஏதாவது ஒரு வங்கியில் ஓர் இந்தியர் கணக்கு வைத்திருந்தால், அவரது கணக்கு விபரங்களை, அந்த ஏதாவது ஒரு வங்கி தன்னுடைய சுவிஸ் நாட்டு அதிகாரிகளுக்கு  தெரிவிக்க வேண்டும். அப்படி சுவிஸ் நாட்டு அதிகாரிகளுக்குத்  தெரிவிக்கப்படும் தகவல் இந்திய வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன்படி வரி ஏய்ப்பவர்கள் மீது இந்திய வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

 

தற்போது இந்திய அரசிடம் தரப்பட்டுள்ள கணக்கு விபரங்கள் 2018-ம் ஆண்டு வரையிலானவை. 2018-ம் ஆண்டில் ஒரு முறை வங்கிக் கணக்கை பயன்படுத்தி இருந்தாலும் இதுவரை அந்த கணக்குக்கு எங்கிருந்து பணம் வந்தது, அந்தக் கணக்கில் இருந்து பணம் எங்கு சென்றது என்ற முழு விபரமும் திரட்டப்பட்டு நம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இது குறித்து டெல்லி அதிகாரிகள் வட்டாரம்  கூறுகையில், “சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்குவோருக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின், இந்த ரகசிய கணக்குகளில் இருந்து சமீப ஆண்டுகளில் பெரும் தொகை வெளியேறியுள்ளது. ஏராளமானோர் வங்கிக் கணக்குகளை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டுள்ளனர்.  இவர்களில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். என்றாலும், ஏற்கனவே இவர்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றம், டிபாசிட், முதலீடு தொடர்பான எல்லா விபரங்களும் உள்ளன என்பதால், இந்த விபரங்களை வைத்து கணக்கில் வராத சொத்துக்களை இவர்கள் வைத்துள்ளனரா என்பதை அறிய முடிவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியும்.    இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் தற்போது இந்தியாவில் வசிக்கவில்லை. தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், தென் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளிலும் இவர்கள் வசிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது’’ என்று கூறியுள்ளார்கள்.

தொடர்ந்து இரண்டாவதாக முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. தாங்கள் 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அளித்த கறுப்பு பணம் மீட்போம் வாக்குறுதியினை நிறைவேற்ற தொடங்கியுள்ளார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப் போவது நிச்சயம்.

தொ.ரா.ஸ்ரீ.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *