அக்டோபரில் அ.தி.மு.க. பொதுக்குழு? –  இரட்டை தலைமை அதிரடி திட்டம்!

slider அரசியல்
எடப்பாடியுடன் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு இதுவரை இருமுறை அ.தி.மு.க. பொதுக்குழு கூடியிருக்கிறது. முதல் பொதுக் குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நடந்த பொதுக் குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு பொதுக்குழு கூடவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், பொதுக்குழுவை கூட்டும் திட்டத்தில் உள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழு என்பது அரசியல் கட்சியினரை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தி.மு.க.வின் பொதுக்குழுவில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்தளவுக்கு அங்கே காரசார விவாதம் நடைபெறும். ஆனால், ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. பொதுக்குழு என்பது பெயருக்கு மட்டும் நடைபெறும். யாரும் எந்த நிர்வாகியும் மூச்சு கூட விடமாட்டார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க. கூட்டும் கூட்டங்களை காட்டிலும் அ.தி.மு.க. கூட்டும் கூட்டங்களில் அனல் பரக்க விவாதங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கூட்டங்களில் அ.தி.மு.க.  நிர்வாகிகள் தங்கள் உள்ள குமுறலை வெளிப்படையாக கொட்டுகின்றனர்.  சமீபத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்ததே இதற்கு  சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழகமெங்கும் அ.தி.மு.க.வினரை உற்சாகத்தபடுத்தவே பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும். வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் தமிழகம் திரும்பியதும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும், உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன்பே பொதுக்குழுவை நடத்தி முடித்துவிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 

வழக்கமாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும். ஆனால்,  இந்த முறை அக்டோபரிலேயே பொதுக்குழுவை நடத்தக் காரணம், முன்கூட்டி விடுதலை செய்யப்படும் சசிகலாவின்  அரசியல் வரவுதானாம். அநேகமாக சசிகலா 2020 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்கிற தகவலும் வந்து சேர்ந்திருக்கிறது. இதனால்தான் அ.தி.மு.க.வின் தலைமை அவசர அவசரமாக அக்டோபர் மாதம் பொதுக்குழுவை நடத்த தீர்மானித்து விட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

அ.தி.மு.க. பொதுக்குழுவில், பல மாவட்டங்களிலும் அதிருப்தியில் இருக்கும் பல நிர்வாகிகள் தங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால், தமிழக அரசியல் நிச்சயமாக பரபரப்பு ஏற்படலாம்.

– எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *